சசி

வேண்டும் வைராக்கியம்

0
323
அ.தி.மு.க பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா

”போயஸ் கார்டன் ஆயாம்மா, நீ இப்ப சி.எம்மா” என்கிற குரல்கள் சமூக வலைத்தளங்களிலும் பொதுத்தளங்களிலும் கேட்கின்றன; ஆயாம்மா சி.எம் ஆவதுதான் ஜனநாயகம்; நீங்களும் நானும் பி.எம் ஆவதுதான் ஜனநாயகம்; கடைக்கோடி மனிதருக்கும் மனுஷிக்கும் திருநங்கைக்கும் ஆட்சி, அதிகாரத்தில் இடமளிப்பதுதான் ஜனநாயகம்; ஆளும் கட்சிக்குள் கருத்தொருமிப்பை ஏற்படுத்தி தலைமையேற்பதுதான் சட்டபூர்வமான, ஜனநாயகபூர்வமான வழிமுறை; இதைத்தான் அ.தி.மு.க பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா செய்திருக்கிறார். ஆனால் அதிருப்தி அலை அலையாக எழுகிறது; சசிகலாவுக்குத் தமிழ்நாட்டை ஆளும் தகுதி இருக்கிறதா என்கிற கேள்விகளை மக்கள் எழுப்புகிறார்கள்; சசிகலாவைவிட சிறந்த முதலமைச்சராக நான் இருப்பேன் என்று பெண் செய்தியாளர்கள் இரண்டு பேர் சொன்னதை முகநூலில் பார்க்க முடிந்தது; இந்த வாதப் பிரதிவாதங்கள்தான் ஜனநாயகத்தின் அழகு.

தமிழ்நாட்டில் ஆகப்பெரிய கட்சியான அ.தி.மு.கவைப் பிளவுபடாமல் கட்டுக்கோப்பாக வழிநடத்துவது சசிகலாவின் ஆளுமைத் திறன் என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும்; ஆனால் வறட்சியில் மடியும் விவசாயிகளுக்கு அவர் தலைமையேற்று நடத்தும் கட்சியின் அரசு நம்பிக்கையளிக்கவில்லை; அ.தி.மு.க அரசால் நடத்த முடியாத ஜல்லிக்கட்டை நடத்திக் காட்டிய மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தை போலீஸ் வன்முறையால் ஒடுக்கிய அராஜகத்தின் நினைவுகள் மக்கள் மனதில் பசுமையாக இருக்கின்றன. மத்திய மோடி அரசின் 500, 1000 ஒழிப்பால் பசியும் பட்டினியுமாக வாடிக்கொண்டிருக்கும் ஏழை, எளிய தமிழ் மக்களின் துயர் துடைக்கிற பார்வை சசிகலாவுக்கு இருப்பதாகத் தெரியவில்லை; தண்ணீர்ப் பற்றாக்குறைத் தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கிக் கொண்டிருக்கும் மணல் கொள்ளை, கனிமக் கொள்ளைகளில் சசிகலாவும் கூட்டுக் களவாணிதான் என்கிற கொந்தளிப்பை சுற்றுச்சூழலில் அக்கறை கொள்ளும் சாதாரண மக்களிடமும் பார்க்க முடிகிறது. இல்லாமையும் கொந்தளிப்பும் இன்னுமொரு மக்கள் எழுச்சியாக வெளிப்பட்டு சசியின் அரசை ஆட்டம் காணச் செய்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஜெயலலிதா சசிகலாவை அரசியல் வாரிசாக அடையாளம் காணவில்லை என்று சில செய்தி முன்னோடிகள் சொல்கிறார்கள்; எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவை அரசியல் வாரிசு என்று அதிகாரபூர்வமாக சொல்லவில்லை; ஜெயலலிதா போராடி மேலெழுந்தார். காலச்சூழலில் தலைமைகள் தானாக மேலெழுகின்றன; போராடி தங்களுடைய இடத்தைத் தக்க வைக்கின்றன அல்லது இழக்கின்றன. இப்போது சசிகலா மேலெழுகிறார்; மக்களின் எதிர்பார்ப்புகளை, விருப்பங்களை ஆட்சி, அதிகாரத்தின் மூலம் நிலைநிறுத்துகிறாரா என்பதைப் பொறுத்து அவர் ஏற்றுக் கொள்ளப்படலாம் அல்லது நிராகரிக்கப்படலாம்; தி.மு.க தலைவர் கருணாநிதியின் நினைவிழப்பும் அ.தி.மு.கவை தனிப்பெரும் கட்சியாக உயர்த்திய ஜெயலலிதாவின் மறைவும் புதிய அரசியல் தலைமை தமிழ் மக்களிடையே உருவாவதற்கான கணக்கற்ற சாத்தியங்களைத் திறந்துவிட்டிருக்கிறது. இந்தப் புதிய வாசல்கள் நமது ஜனநாயகத்துக்கு நம்பிக்கைச் சாவிகளைக் கொடுக்கும். சசிகலாவும் ஸ்டாலினும் இவற்றை அரவணைக்கிறார்களா அல்லது வன்முறையால் நசுக்க விழைகிறார்களா என்பதைத் தமிழ்ச் சமூகம் உன்னிப்பாக கவனித்து கணக்கு தீர்க்கும்.

சசிகலா அரசு இன்னுமொரு குடும்ப ஆட்சியை முன்னிறுத்தினால் அதன் படுகுழியை அதுவே தோண்டிக்கொள்ளும். மக்கள் நல அரசு, மாநில உரிமைகள், மதச்சார்பின்மை என்கிற ஜெயலலிதாவின் மூன்று தாரக மந்திரங்களைப் பற்றிப் பிடித்து உறுதியாக நிமிர்ந்து நின்றால் ஜெயலலிதா சொன்னதுபோல அ.தி.மு.க இன்னும் பல காலம் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற இயக்கமாக தொடரும்; “ஜெயலலிதா வழியில் நடப்பேன்” என்று சசிகலா டிசம்பர் 29ஆம் தேதியும் (2016), பிப்ரவரி 5ஆம் தேதியும் (2017) சொன்னாலும் அந்த நம்பிக்கை சாதாரண அ.தி.மு.க தொண்டர்களிடமோ, சாதாரண மக்களிடமோ வரவில்லை; 45 நாட்களுக்கு முன்பு இப்போது டாட் காம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் சசிகலாவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்கிற கள நிலவரம் தெரிய வந்தது; அந்த நிலவரம் பெரிதாக மாறிவிடவில்லை என்பதை இப்போதுள்ள களத் தகவல்கள் உறுதி செய்கின்றன; செயல்களே சிறந்த சொற்களாக இருக்கும் என்கிற சூழலில் சசிகலா இருக்கிறார்; வரலாறு தந்துள்ள இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தினால் பகைச்சூழலை வென்று முடிக்கலாம்; பகைச்சூழல் தருகிற வைராக்கியமே நல்லாட்சிக்கான உந்துவிசையாக மாறக்கூடும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்