மத்திய அரசு பணமதிப்பிழப்பு அறிவித்த போது சசிகலா ரூ.168 கோடிக்கு பினாமி சொத்து வாங்கியது உண்மை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி மத்திய அரசு பணமதிப்பிழப்பு திட்டத்தை அறிவித்தது. அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 செல்லாது என அறிவிக்கப்பட்டது.

அந்த நேரத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா புதிதாக ஏராளமான சொத்துக்களை வாங்கினார். அப்போது ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாமல் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

சசிகலா இவ்வாறு செல்லாத நோட்டுகளை பயன்படுத்தி சொத்துக்கள் வாங்கி இருப்பதை வருமான வரித்துறை கண்டுபிடித்தது.

இதையடுத்து வருமான வரித்துறையினர் சசிகலாவுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் உறவினர் வீடு, அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தினார்கள்.

அந்த சோதனையில் சசிகலா ரூ.1,674 கோடியே 50 லட்சத்துக்கு செல்லாத நோட்டுகளை பயன்படுத்தி சொத்துக்கள் வாங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதுபற்றி வருமான வரித்துறையினர் சசிகலாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி இருந்தனர்.

இவ்வாறு சொத்துக்கள் வாங்கியது பினாமி சட்ட விதிகளின்படி குற்றமாகும். அதன் அடிப்படையில் அந்த சொத்துக்களை பறிமுதல் செய்ய வருமான வரித்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

சசிகலா வாங்கிய சொத்துகளில் புதுவை அருகே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஓசியன் ஸ்பிரே கடற்கரை ரிசார்ட் ஓட்டலும் ஒன்று.

இந்த ஓட்டல் புதுவையை சேர்ந்த பிரபல நகைக்கடையான லட்சுமி ஜூவல்லரி நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.

ஓட்டலை சசிகலா ரூ.168 கோடிக்கு வாங்கி இருந்தார். அதற்காக ரூ.148 கோடி செல்லாத நோட்டு பணம் வழங்கப்பட்டு இருந்தது.

இந்த ஓட்டலையும் பினாமி சொத்துக்கள் என்ற அடிப்படையில் பறிமுதல் செய்ய வருமான வரித்துறை ஓசியன் ஸ்பிரே ஓட்டல் நிறுவனத்துக்கு நோட்டீசு அனுப்பி இருந்தது.

இதை எதிர்த்து அதன் இயக்குனர் நவீன் பாலாஜி மற்றும் பங்குதாரர்கள் 6 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் நடந்து வந்தது.

ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நவீன் பாலாஜி தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில், பினாமி சொத்து என்ற அடிப்படையில் இதை பறிமுதல் செய்ய முடியாது. நாங்கள் சசிகலாவிடம் அந்த ஓட்டலை விற்பதற்கு ஒப்பந்தம் செய்து இருந்தோம். ஆனால், அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை.

ஒப்பந்ததாரர்கள் அதை ரத்து செய்து விட்டார்கள். எனவே, அவர்கள் கொடுத்த பணத்தை எங்களிடம் கேட்டு வற்புறுத்தி வந்தனர்.

இதன் காரணமாக ஓட்டல் விற்பனை இறுதி ஆகவில்லை. ஓட்டலை ரூ.168 கோடிக்கு வாங்குவதாக கடந்த 2016-ம் ஆண்டு வி.கே.சசிகலாவின் பிரதிநிதிகள் 2 பேர் எங்களிடம் விலை பேசினர். அப்போது மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை பணமதிப்பிழப்பு செய்து இருந்தது.

ரூ.135.25 கோடிக்கு மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை கொடுத்து, இதை மாற்ற முடியவில்லை என்றால், திரும்ப பெற்றுக்கொள்வதாக கூறினர். இதில் ரூ.37 கோடியை எங்களால் மாற்ற முடியவில்லை.

இந்த விவரங்கள் அனைத்தையும், வருமானவரித்துறை நடத்திய விசாரணையின்போது கூறியுள்ளோம். இந்த நிலையில் எங்களை வி.கே.சசிகலாவின் பினாமிகள் என அறிவித்து எங்களது சொத்துக்களை முடக்கி வருமானவரித்துறை கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதற்கு பதில் அளிக்கும் படி நீதிபதி அனிதா சுமந்த் வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு இருந்தார்.

இதன் அடிப்படையில் வருமான வரித்துறை துணை கமி‌ஷனர் திலீப் சார்பில் நேற்று ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறி இருந்ததாவது:-

ரூ.168 கோடிக்கு ஓட்டலை வாங்குவதற்கு சசிகலா மற்றும் அவரது தரப்பில் இருந்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக அந்த ஓட்டல் நிறுவனம் தனது பங்குகளை சசிகலா தரப்புக்கு மாற்றிக் கொடுத்துள்ளது. இதற்கான பணத்தையும் அவர்கள் பெற்றுக்கொண்டு விட்டார்கள்.

எனவே, ஓட்டல் விற்பனை என்பது முடிந்து விட்டது. இது சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் நாங்கள் சோதனை நடத்திய போது, கண்டுபிடித்து இருக்கிறோம்.

நடந்த ஒப்பந்தங்களை மறைத்து முந்தைய ஓட்டல் பங்குதாரர்கள் தவறான தகவல்களை தருவதற்கு முயற்சிக்கிறார்கள். இது, பினாமி சொத்து என்ற அடிப்படையில் நடந்த பரிமாற்றம் என்பது உறுதியாகி உள்ளது.

எனவே, ஓட்டலை கைப்பற்றுவதற்கு பினாமி சொத்து சட்ட விதிகளின்படி உரிமை உள்ளது. எனவே ஓட்டல் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக அந்த ஓட்டல் நிறுவனம் மார்ச் 13-ந்தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here