அ.தி.மு.கவில் சசிகலாவுக்கு இடமில்லை’ என அக்கட்சித் தலைமை தெளிவுபடுத்திவிட்டாலும் மிகுந்த நம்பிக்கையோடு அவர் வலம் வருகிறார். `வரும் நாட்களில் அ.தி.மு.க எந்தளவுக்கு ஒற்றுமையாக செயல்படப் போகிறது என்பதைப் பொறுத்துத்தான் அ.ம.மு.கவின் எதிர்காலம் அமையும்’ என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

கர்நாடக மாநிலம், பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் வெளியில் வந்த நாள் முதலாக, அ.தி.மு.கவில் கால் பதிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை சசிகலா மேற்கொண்டு வருகிறார். `சசிகலாவை சேர்த்துக் கொள்வதற்கு 100 சதவீதம் வாய்ப்பில்லை’ என அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.

இருப்பினும் தொண்டர்களுடன் பேசுவது, முக்கிய நிர்வாகிகளை சந்திப்பது என தி.நகரில் உள்ள வீட்டில் இருந்தபடியே அரசியல் நிகழ்வுகளை சசிகலா மேற்கொண்டு வந்தார். `சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மொத்த அ.தி.மு.கவும் தன்பக்கம் வரும்’ என நம்பிக் கொண்டிருந்தார். ஆனால், 75 இடங்களோடு வலுவான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க அமர்ந்துவிட்டதால், சசிகலாவின் கணிப்புகள் பொய்த்துப் போனது.

கல்வெட்டில் `பொதுச்செயலாளர்’

இருப்பினும், அனைவரும் ஒற்றுமையாக இருந்திருந்தால் ஆட்சியை பிடித்திருக்கலாம் எனவும் சசிகலா தரப்பினர் பேசி வந்தனர். இதன்பிறகு, சற்று அமைதியாக இருந்த சசிகலா, தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி அடுத்த இன்னிங்ஸை தொடங்கிவைத்தார். இதனால் அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியில் ஆழ்ந்தனர். மேலும், கொரோனா இரண்டாம் அலை காரணமாக தனது சுற்றுப்பயணத்தையும் சசிகலா ஒத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில், அ.தி.மு.கவின் பொன்விழாவையொட்டி கடந்த 17 ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று சசிகலா அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கண்கலங்கிய காட்சிகள் வைரலானது. `என் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்துவிட்டேன், இனி அ.தி.மு.கவை எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள்’ என்றார். இதனை விமர்சித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், `அவரது இந்த நடிப்புக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்’ என்றார்.

இதன்பின்னர், தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் அ.தி.மு.க கொடியை ஏற்றிய சசிகலா, ஒரு கல்வெட்டையும் திறந்தார். அதில், அவர் பெயர் அ.தி.மு.க பொதுச்செயலாளர் என்றே குறிப்பிடப்பட்டிருந்து. பின்னர், அங்கிருந்து ராமாவரம் தோட்டத்துக்குச் சென்றார். அ.தி.மு.க கொடி, கரைவேட்டி கட்டிய தொண்டர்கள் என சசிகலா இயங்கினாலும், எந்த இடத்திலும் டி.டி.வி தினகரன் தென்படவில்லை. முன்னதாக சசிகலா கோயிலுக்குச் சென்றபோதும் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் மட்டுமே உடனிருந்தார்.

தினகரன் எங்கே?

`அ.தி.மு.கவை மீட்பதற்கான கருவியாக அ.ம.மு.க இருக்கிறது’ என தினகரன் ஆதரவாளர்கள் தெரிவித்தாலும், அண்மைக்காலமாக அரசியல்ரீதியிலான நடவடிக்கைகளில் தினகரனை சசிகலா ஒதுக்கி வைத்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது. “ தினகரன் இல்லாமல் சசிகலா வெளியில் வருவதைப் பார்க்க முடிகிறது. சொந்தங்களை விட்டு வெளியே வருவது என்பது நல்ல விஷயம்தான். அதேநேரம், அவரை நாங்கள் உள்ளே விடமாட்டோம் என ஜெயக்குமார் சொல்வது ஏன் எனத் தெரியவில்லை.

தினகரன்

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவுடன் ஜானகி அம்மா சமரசத்துக்கு வந்தார் என அ.தி.மு.கவினர் கூறுகிறார்கள். அவர்கள் இருவருக்கும் இடையில் பகைமை இருந்தாலும் இருவரும் விட்டுக் கொடுத்துச் சென்றனர். அப்படியிருக்கும்போது சசிகலாவை மட்டும் ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்?

வரும் நாட்களில் சசிகலாவால் தேர்தலில் போட்டியிடவே முடியாது. சிட்டி சிவில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரையில் அ.தி.மு.கவில் சசிகலாவுக்கும் உரிமை உள்ளது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான் அ.தி.மு.க நிர்வாகிகள் செயல்பட முடியும்” என்கிறார், அ.தி.மு.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி.

பாதுகாப்புக்கு 200 பேர்

தொடர்ந்து பேசியவர், “ சசிகலா வந்துவிடக் கூடாது என்பதற்காக, அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் 200 பேரை பாதுகாப்புக்கு நியமித்துள்ளனர். இவர்கள் எதற்காக சசிகலாவை பார்த்து பயப்படுகின்றனர் எனத் தெரியவில்லை. தலைமைக் கழக கணக்குகளை நீதிமன்ற அனுமதியோடு சசிகலா பார்க்க வந்தால் என்னவாகும்?

மேலும், சசிகலா செல்கிற இடத்தில் எல்லாம் தினகரனோடு உள்ள நிர்வாகிகளையும் பார்க்க முடிகிறது. அனைவரும் சசிகலா பின்னால் அணி திரண்ட பிறகு, அ.ம.மு.கவை நிரந்தரமாக மூடுவதுதான் சரியாக இருக்கும்” என்கிறார்.

இதையடுத்து, பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், “ அண்ணா தி.மு.கவுக்கு உரிமை கோரி சிவில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தினகரன் வாபஸ் பெற்றுவிட்டார். அவர் அ.ம.மு.கவாக தொடர்கிறார்.

அ.ம.மு.கவின் திட்டம் என்ன என்பது குறித்து அவர்கள் இதுவரையில் பேசவில்லை. அ.தி.மு.கவை கைப்பற்றும் வேலையை சசிகலா கையில் எடுத்துள்ளார். எந்தவொரு அரசியல் நடவடிக்கைக்கும் நேரம் என்பது மிக முக்கியமானது” என்கிறார்.

கோப்பு

“அ.தி.மு.கவின் பொன்விழா முடிந்ததும் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்படுகிறது. அ.தி.மு.கவை பலவீனப்படுத்துவதற்கு தி.மு.க முயல்கிறது. இது சசிகலாவுக்கு லாபத்தைக் கொடுக்கலாம். அக்கட்சியின் தொண்டர்களை பலவீனப்படுத்த முடியாது. ஆனால், தலைவர்களை பலவீனப்படுத்தலாம். கொடநாடு வழக்கில் எடப்பாடிக்கு சிக்கல் வந்தால் சசிகலாவுக்கு பலன் கிடைக்கும்.

சசிகலாவுடன்தான் பயணம்

தற்போது அ.தி.மு.க சார்பாக, பேரூராட்சித் தேர்தலில் நிற்பவர்கள் எல்லாம் அடுத்த 5 ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவே விரும்புவார்கள். அப்படிப்பட்ட சூழலில் அ.தி.மு.கவின் எதிர்காலம் என்ன என்பது குறித்து அவர்கள் யோசிப்பார்கள். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வடமாவட்டங்களில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பெரிதாக தேர்தல் வேலை பார்க்கவில்லை என்பது தெரிகிறது.

அந்தவகையில் நன்கு தெரிந்த முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடந்தால், கீழ்மட்ட அளவில் உள்ள தொண்டர்கள் ஒற்றுமைக்குத் தயாராக இருப்பார்கள். சொல்லப்போனால், அ.தி.மு.க எந்தளவுக்கு ஒற்றுமையாக செயல்படப் போகிறது என்பதைப் பொறுத்துத்தான் அ.ம.மு.கவின் எதிர்காலம் அமையும்” என்கிறார் ஷ்யாம்.

சசிகலாவின் பயணங்களில் தினகரன் தென்படாதது விவாதப் பொருளாகியுள்ளதே? என அ.தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதியிடம் கேட்டோம். “ சுற்றுப்பயணம் முழுக்கவே சின்னம்மா (சசிகலா) செய்த ஏற்பாடுகள்தான். நாங்கள் சின்னம்மாவுடன்தான் தொடர்ந்து பயணிக்கிறோம். அ.ம.மு.க எப்போதும் அவருடன் தான் பயணிக்கும்” என்கிறார்.

பொன்விழா பயணத்தைத் தொடர்ந்து மாவட்ட அளவில் சுற்றுப்பயணம் செல்லும் முடிவில் சசிகலா உள்ளதாகக் கூறப்படுகிறது. அவரது செயல்பாடுகளை தடுக்கும் வகையில் அ.தி.மு.க நிர்வாகிகளும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருவதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

Courtesy: BBC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here