சசிகலா என்ன நாடகம் நடத்தினாலும் எந்த உருவத்தில் வந்தாலும் இன்னொருமுறை அதிமுக இயக்கம் ஏமாறுவதற்குத் தயாராக இல்லை -சி.வி.சண்முகம்

0
297

நிஜத் தலைவர்களின் அழைப்பையே எதிர்கொண்ட அதிமுக தொண்டர்கள், நிழல் தலைவர்களை நம்பி ஏமாறமாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் அதிமுக பொன்விழா ஆண்டுக் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. அதன்படி விழுப்புரம் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சக்கரபாணி, அர்சுணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அப்போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்ததாவது:

”அதிமுகவில் 2-ம் கட்டத் தலைவர்களாக இருந்த நாவலர் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், எஸ்.டி.சோமசுந்தரம் போன்ற நிஜத் தலைவர்கள் தனிக் கட்சித் தொடங்கி, அதிமுகவை அசைத்துப் பார்க்க முயற்சித்து தோல்வியைத் தழுவினர். நிஜத் தலைவர்களாலேயே முடியாததை நிழல் தலைவர்களால் செய்துவிட முடியாது. இந்த இயக்கத்தை அழித்துவிட எத்தனித்த எதிரிகளையே வென்று இருக்கிறோம். தற்போது துரோகிகளை எளிதாக வெல்வோம்.

தொண்டர்களால் உருவாக்கப்பட்ட மாபெரும் அதிமுக. தற்போதும் தொண்டர்களாலேய இயங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தலில் வெற்றி- தோல்வி என்பது சகஜம். கடந்த 1996-ல் ஏற்பட்ட தோல்வியைக் காட்டிலும் தற்போது ஏற்பட்டிருக்கும் தோல்வி பெரிதல்ல. அதையே தாண்டி மீண்டும் அரியணை ஏறிய கட்சி அதிமுக. ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுக இயக்கத்தைத் துளியும் அசைத்துக்கூடப் பார்க்க முடியாது. தொண்டர்கள் அவரை நம்பி ஏமாற மாட்டார்கள்.

சசிகலா என்ன நாடகம் நடத்தினாலும் எந்த உருவத்தில் வந்தாலும் இன்னொருமுறை அதிமுக இயக்கம் ஏமாறுவதற்குத் தயாராக இல்லை. சசிகலாவால் தொடங்கபட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தையே காப்பாற்ற முடியாதவர் அதிமுகவைக் கைப்பற்ற நினைப்பதா? எம்ஜிஆர் உருவாக்கித் தந்த இரட்டை இலைச் சின்னத்தை பெற ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கையில், எங்களுக்கு சசிகலா தேவையில்லை.

அதிமுக பொன்விழா ஆண்டில் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைப்போம் என்று தொண்டர்கள் சபதம் ஏற்றுக்கொண்டுள்ளனர்.”

இவ்வாறு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here