உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் மூன்று பேரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய காவல்துறைக்கு அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உடுமலைப்பேட்டை, தலித் சமூகத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கவுசல்யா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 13ஆம் தேதியன்று, உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த சங்கர் மற்றும் கவுசல்யா மீது ஒரு கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. இதில் சங்கர் உயிரிழந்தார். இந்தத் தாக்குதலில் கவுசல்யாவும் படுகாயம் அடைந்தார்.

இது தொடர்பாக கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, கவுல்யாவின் உறவினர் பாண்டித்துரை, மணிகண்டன், ஜெகதீசன் உள்ளிட்ட 11 பேரைப் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இது தொடர்பான வழக்கில், கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி, திருப்பூர் குற்றவியல் நீதிமன்றம், கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி உட்பட ஆறு பேருக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது.

மேலும் ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்ற ஒருவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்தது. கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, பாண்டித்துரை மற்றும் பிரசன்ன குமார் ஆகிய மூவரையும் விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் இந்த மூவரின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்ய உடுமலைப்பேட்டை டி.எஸ்.பி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்