கௌரி லங்கேஷின் ரத்தம் பேசுகிறது

Gauri Lankesh's Assassination Will Not Silence the Righteous

0
1646
பாசிஸ்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ்

தன்னுடைய 55ஆவது வயதில் தன் சொந்த வீட்டின் வாசற்படியில் வைத்து குண்டடிபட்டு வீழ்ந்த கௌரி லங்கேஷ், ஓர் உன்னதமான ஜனநாயக – மதச்சார்பற்ற மதிப்பீட்டுக்காக தன்னை நிலை நிறுத்திக்கொண்ட வீரப்பெண்மணியாக இருந்தார். இவரின் குரல், ஒவ்வொருவரின் சுதந்திரங்களுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் நிரந்தரமாக உயர்ந்து நின்றது.

கௌரி லங்கேஷை நான் முதன்முதலில் பார்த்த அன்று, அது ஒரு பரஸ்பர அறிமுகமாக இருந்திருக்கவில்லை. காரணம், அவள் இரண்டோ மூன்றோ வயதுள்ள குழந்தையாக, அவளின் தந்தை பி.லங்கேஷின் கைகளில் தவழ்ந்துகொண்டிருந்தாள்.

1964 – 66 காலகட்டங்களில் இது நடந்தது. நான் அப்போது பெங்களூரு பல்கலைக்கழகத்தின் கீழ், நகரின் மத்தியில் அமைந்துள்ள சென்ட்ரல் கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது, திரு. பி.லங்கேஷ், அந்த கல்லூரியில் ஆங்கிலத் துறையில் பணிக்குச் சேர்ந்திருந்த இளம் வயதுள்ள விரிவுரையாளராக இருந்தார். நான் உள்ளிட்ட சீனியர் மாணவர்களுக்கு அவர் பாடம் நடத்தவில்லை என்றாலும்கூட, அப்போதே புகழின் உச்சியைத் தொட்டிருந்த கிளர்ச்சிக்கார எழுத்தாளரான அவரோடு, நாங்கள் சிலர் நெருங்கிய நட்புடன் இருந்தோம். கேன்டீன் மற்றும் பிரிகேட் சாலையிலுள்ள பார்களில் அமர்ந்தபடி நாங்கள் பாடத்தைத் தாண்டி பல்வேறு விஷயங்களை விவாதிப்போம்.

அன்று எழுதத் தொடங்கியிருந்த எனக்கு லங்கேஷ் கூறிய அறிவுரை என்பது, ஏதோ, என்னுடைய எழுத்தின் நடையைக் குறித்தோ அல்லது அதன் நேர்த்தியைப் பற்றியதோ அல்ல; அன்று நான் அவர் கூறுவதை முழுமையாக புரிந்துகொள்ள இயலாதவனாக இருந்தபோதும்கூட, அவரின் அறிவுரையானது ‘எழுத்தின் அரசியலைப்’ பற்றியதாக இருந்தது.

லங்கேஷ், கர்நாடகாவின் மலைப்பிரதேசமான பின் தங்கிய சிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஒரு கிராமத்து விவசாயியின் முகத்தில் ஆடும் தயக்க உணர்வு கொஞ்சமும் இல்லாத; வெட்டு ஒண்ணு; துண்டு ரெண்டு என்று பேசுகிறவர். சில நேரங்களில் காயம் ஏற்படுத்துகிற அளவுக்கு தெறிக்கும் பேச்சு; சாதி – மத அரசியல் நிலைகளுக்கு ஆணித்தரமான எதிர்ப்பு ஆகியவைதான் லங்கேஷின் சுய அடையாளமாக இருந்தன. அன்று நாடகத்துறையிலும் லங்கேஷ் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தார். புரட்சிகரமான கருத்துக்களைக்கொண்ட ஒரு நாடகத்தை, ரபீன்திரா நாடக அரங்கில் அரங்கேற்றம் செய்வதற்காக, அது தொடர்பான வேலைகளைச் செய்வதற்கு, நாங்களெல்லாம் அவருடனேயே இருந்தோம்.

அந்த நாட்களில் பெங்களூருவில் வசதி வாய்ப்புகள் கொஞ்சமும் இல்லாத குடியிருப்புப் பகுதிகளில் ஒன்றில், வாடகை வீட்டில் வசித்து வந்தார் பி. லங்கேஷ். அவரது வீட்டிற்கு நான் சென்றிருந்தபோதுதான், கடந்த 5ஆம் தேதி கொலையாளிகளின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையான கௌரியைப் பார்த்தேன். அவள், தனது தந்தை மற்றும் சுத்தமான கிராமத்துப் பெண்ணான தனது தாயின் கைகளில் இருந்தாள். சிலகாலம் கடந்த பிறகு, நான் பெங்களூருவை விட்டுப்பிரிந்தேன். பின்னர் எப்போதோ ஒரு நாள், கௌரியை பாவாடை கட்டிய சிறு பெண்ணாக பார்த்த நினைவுண்டு. அப்போது, பி.லங்கேஷ், ‘லங்கேஷ் பத்திரிகையை’ தொடங்கியிருந்தார். அந்தப் பத்திரிகை, மக்களின் விருப்பத்தின் உச்சாணிக்கொம்பில் இருந்தபோதுதான் லங்கேஷ் மரணமடைந்தார்.

மனோதிடமும், உண்மையை உரக்கச் சொல்லும் தைரியமும், கட்டுறுதியான ஜனநாயகம் மற்றும் சமயச் சார்பின்மையும், முக்கிய எதிர்ச் சக்திகளோடு எதிர்த்து நிற்கும் குணம் ஆகியவைதான், தந்தை லங்கேஷிடமிருந்து கௌரி பெற்றுக்கொண்ட பூர்வீகச் சொத்து. இன்று இதோ, இந்த கௌரி லங்கேஷ், ஒரு நல்ல இந்தியப் பெண்ணாக தன்னுடைய ரத்தத்தால், தற்போதைய இந்திய அரசியல் மீது, உண்மை என்ற செந்தூரப்பொட்டை சூடிச்சென்றிருக்கிறார்.

மதிப்புமிக்க மூத்தவர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே மற்றும் எம்.எம். கல்புர்கி ஆகியோரின் படுகொலைகளுக்குப் பிறகு, அந்தப் படுகொலைகளுக்குச் சமமான முக்கியப்படுத்தலுடன் கௌரி லங்கேஷின் கொலையும் நடந்திருக்கிறது. ஆனால் இந்தக் கொலையானது தெரியப்படுத்தும் விஷயம் என்பது, ஒருவேளை காந்தியின் கொலைக்குப்பிறகு, பாசிசவாதிகளின் விருப்பப்பட்ட ஆயுதமாக துப்பாக்கி மாறியிருக்கிறதோ என்பதுதான். இந்த முறை இந்தப் பாசிசவாதிகள் ஒரு பெண்ணைக் கொலை செய்திருக்கிறார்கள், அவ்வளவுதான். மரணப்படுக்கையில் கிடந்த யூ. ஆர். அனந்தமூர்த்தியை அவர்கள் கொலை செய்யவில்லை; மாறாக அணுவணுவாக கொலைசெய்தார்கள்.

தன்னுடைய 55ஆவது வயதில் தன் சொந்த வீட்டின் வாசற்படியில் வைத்து குண்டடிபட்டு வீழ்ந்த கௌரி லங்கேஷ், ஓர் உன்னதமான ஜனநாயக – மத சார்பற்ற மதிப்பீட்டுக்காக, தன்னை நிலை நிறுத்திக்கொண்ட வீரப்பெண்மணியாக இருந்தார். இவரின் குரல், ஒவ்வொருவரின் சுதந்திரங்களுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் நிரந்தரமாக உயர்ந்து நின்றது. தீவிர இந்துத்துவாவின் பயங்கரங்களை தன்னுடைய சொந்த நாளிதழிலும், மற்ற பிற தளங்களிலும் வெளிப்படையாக எதிர்த்து வந்தார் கௌரி லங்கேஷ்.

கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தபோது, அங்கு நடந்த ஒரு மோசடியில், பாஜகவினர் சிலருக்கும் தொடர்பு உள்ளது என்ற ஒரு செய்தியை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து எதிர்த்தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் சிறைசென்று, ஜாமீனில் வெளியே வந்திருந்தார் கௌரி. அப்போதுதான் காந்தியின் ரத்தம் புரண்ட பழைய துப்பாக்கி, புதிய கைகளுக்குச் சென்று, இந்தப் புதிய இரையைத் தேடி வந்தது.

தாய்தான் பசு; பசு மிகவும் புனிதமானது. அப்படியானால் ஒரு பெண்? ஒரு மனுஷியின் ரத்தத்திற்குப் புனிதம் இல்லையா? பாசிசத்திற்கு எந்த ஒரு ரத்தமும் புனிதமானது இல்லை என்பதே நிதர்சனம். இங்கு ரத்தம் என்பது ஒரு உபகரணம் மட்டுமே. இந்தக் கொலை நிகழ்வுகள் ஏதோ இன பாசிசத்தினுடையது மட்டுமல்ல; எல்லா பாசிசங்களின் செயல்களும் இப்படியாகத்தான் இருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

கௌரி லங்கேஷுக்கு நடந்தது போன்ற ஒரு கொலைபாதகத்தின் நோக்கம், வெறுமனே உண்மையின் வாயை ஊமையாக்க வேண்டும் என்பது மட்டுமல்ல. இதுபோன்ற கொலைகள் எப்போதும் அகந்தை நிறைந்த அதிகாரப் பிரகடனமும், இன்றைய அரசியலில் கடைசியாக உள்ள அதன் சாரத்திற்கு எதிராக விடுக்கப்படும் அறைகூவல்களாகவும் இருக்கின்றன. ஆட்சியோ, நீதி, நியாய நிலைகளோ இந்தப் பாசிசத்திற்கு ஒரு பிரச்சினையில்லை. தங்களுடைய வலிமை, சர்வாதிகாரம் ஆகியவற்றைப் பாதுகாத்துக்கொள்வோம் என்ற விளம்பரப்படுத்தலானது, இதுபோன்ற படுகொலைகளில் அடங்கியிருக்கிறது.

கதவைத் தட்டி அழைத்து, வெளியே இழுத்துச் சென்று, பின்னர் செய்யப்பட்ட இந்தப் படுகொலையானது, ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின் ஆகியோரின் அதிகார முறைமையின் ஒரு பகுதியாக இருந்தது. இங்கே வெளிப்படையாக இழுத்துச்சென்று, நம்மைக் கொன்றுபோடுவதற்கான சூழல் மட்டும் இன்னும் கனியவில்லை என்று பாசிசவாதிகள் நினைக்கிறார்கள் என நாம் கருதலாம்.

ஒரு கொலை நமக்கு உண்டாக்குகிற நடுக்கமும், பீதியும்தான் அந்தக் கொலையிலிருந்து பாசிசவாதிகளுக்குக் கிடைக்கப்பெறும் பிரதிபலனாக இருக்கிறது. கௌரியின் கொலையானது, அவரின் சத்தத்தை இல்லாததாக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே நடத்தப்பட்டது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், ஊடகவியலாளர்களுக்கும், ஜனநாயகவாதிகளுக்கும், மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கும், மனிதாபிமானிகளுக்கும் கொடுக்கப்பட்ட “ஜாக்கிரதை,… என்னைப் பின்பற்று” என்ற முன்னெச்சரிக்கையும் கூடவே அதில் இருக்கிறது.

இந்தியா என்ற தேசம், அதன் 70 ஆண்டுகால நீண்ட சரித்திரத்தில், ஒருபோதும் அறிந்திராத நெருக்கடி நிலைக்குள் தற்போது கடந்து வந்திருக்கிறது என்பதைத்தான் கௌரி லங்கேஷின் கொடூர மரணம் நம்மோடு பேசுகிறது. நாம் நேசித்த இந்தியா என்ற ஒரு ஜனநாயக நாடு, இப்போது மறைந்துகொண்டிருக்கிறது. பசுப் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் கொலையாளிக்கூட்டங்கள் மனித உயிர்களைக் கசக்கி எறிகின்றன. வெறுப்பும், இனவெறியும், சாதி – மத சகிப்பின்மையும் விலங்கு உடைத்து புறப்பட்ட பூதம்போல் வேட்டைக்கு இறங்கியிருக்கின்றன.

ஏழ்மையை ஒழிப்பதைக்காட்டிலும், ஏழைகளை எளிதாக ஒழித்துக்கட்டிவிடலாம் என நம்பும் ஒரு கூட்டம் மெதுவாக வெளியே தலைகாட்டத் தொடங்கியிருக்கிறது. ஆயிரம் ஆயிரம் நாவுகளிலிருந்து விஷம் உமிழப்பட்டுக்கொண்டிருக்கிறது. உண்மையை உரக்கச் சொல்லவேண்டிய நாவுகள் மௌனம் காத்துக்கொண்டிருக்கின்றன.

இந்தியாதான் நம் தாய். தாயேயன்றி வேறல்ல. அந்த இந்தியா இப்போது மன் கீ பாத்துகளின் மதுர வார்த்தைகளுக்கு அப்பால், காரிருளில் சிக்கி, விவரிக்க இயலாத ஆபத்துக்குள்ளாக பாய்ந்தோடிக்கொண்டிருக்கிறது. இதைச் சொல்லும் மற்றொரு அச்சுறுத்தலான சமிக்ஞைதான், கௌரி லங்கேஷ் என்ற பாரதக் குடிமகளின் வீட்டுப்படியில் காய்ந்து உறைந்து கிடக்கும் நமது சொந்த இதயத்தின் ரத்தம்……

நன்றி – சகரியா,
மலையாள மனோரமா நாளிதழிலிருந்து…..
தமிழில் – குஞ்சம்மாள்

இதையும் படியுங்கள்: வடமாவுக்கும் பறையருக்கும் என்ன சம்பந்தம்?

அன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள GIVE 5 பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ அழையுங்கள்:

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்