கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரை அடுத்துள்ள நரசீபுரத்தில் தனியார் கலை, அறிவியல் கல்லூரியின் 2வது மாடியில் இருந்து மாணவியை தள்ளி விட்ட ஆறுமுகம், பேரிடர் மேலாண்மைப் பயிற்சியாளர் போர்வையில் 6 ஆண்டு காலமாக பல்வேறு கல்லூரிகளில் மோசடியில் ஈடுபட்டு வந்தது போலீசார் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியில் மரணமடைந்த லோகேஸ்வரி (19), தொண்டாமுத்தூர் அருகே உள்ள நாதே கவுண்டன்புதூரை சேர்ந்தவர். இவர் அந்த கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இது தொடர்பாக மாணவியின் தந்தை ஆலாந்துறை போலீசில் அளித்த புகாரின் பேரில் பயிற்சியாளர் ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் ஆறுமுகம் சென்னையை அடுத்த மாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. இவர் மீது இந்திய தண்டனை சட்டம் 304(2) (இறப்பு ஏற்படும் என்று தெரிந்தும் உயிரிழப்பை ஏற்படுத்துதல்) பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி, பேரூர் காவல் ஆய்வாளர் மற்றும் ஆலாந்துறை காவல் ஆய்வாளர் ஆகியோரைக் கொண்ட தனிப்படையை அமைத்தார்.

இந்த தனிப்படையினர் ஆறுமுகம் தொடர்பான விவரங்களை திரட்டியதில், நெல்லையை சேர்ந்த ஆறுமுகம், சென்னை கேளம்பாக்கத்தில் வசித்து வந்தது கண்டறியப்பட்டது. மேலும் கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு கல்லூரிகளில் அனுமதியைப் பெற்று அவன் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், பயிற்சியில் பங்கு பெறும் மாணவ-மாணவிகள் அதற்கான சான்றிதழை 50 ரூபாய் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என்றும், வேலைவாய்ப்புக்காக அதை பதிவுசெய்துகொள்ளலாம் என்றும் கூறி மோசடி நாடகத்தை அரங்கேற்றி வந்துள்ளான்.

ஆறுமுகம் கல்லூரி நிர்வாகங்களுக்கு அனுப்பியவை அனைத்தும் போலி கடிதங்கள் என்று தெரிவித்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்