கோவையைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்திலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு மேற்கொண்டார்.

கடந்த மாதம் நவம்பர் 14ஆம் தேதியன்று, கோவை பாரதியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அங்குள்ள மாவட்ட நிர்வாக அதிகாரிகளோடு இணைந்து மாவட்டப் பணிகளை ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து அடுத்த நாள் (நவ.15) கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆளுநரின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. மேலும் பாரதிய ஜனதா கட்சி, தமிழகத்தில் மறைமுகமாக ஆட்சி நடத்தி வருவதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். இதற்கு அரசியல் சாசன சட்டத்தின்படி ஆய்வு மேற்கொண்டதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கமளித்தார். ஆளுநரின் ஆய்வு நடவடிக்கையை அதிமுக அமைச்சர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வருகை தந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால், பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து பாளையங்கோட்டை லூர்துநாதன் சிலை அருகே உள்ள குடியிருப்புவாசிகளிடம் தூய்மை இந்தியா திட்டம் குறித்து பேசினார். மாநில அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் என யாரையும் அழைக்காமல், அரசு அதிகாரிகளை அழைத்துக் கொண்டு அவர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அரசு விருந்தினர் மாளிகையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அரசு அதிகாரிளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இதையும் படியுங்கள்: அன்புசெழியன்… களையை பிடுங்கலாம், களத்தை என்ன செய்வது? – கோலிவுட்

வேதாளம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்