பாலியல் மோசடி குற்றச்சாட்டு; கோவா பாஜக அமைச்சர் ராஜினாமா

0
279

கோவாவில் அமைச்சர் மிலிந்த் நாயக் மீது பாலியல் மோசடி குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் கோவா நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக இருப்பவர் மிலிந்த் நாயக். இவர் பாலியல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அம்மாநில காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

இதையும் படியுங்கள் : 👇

நவம்பர் 30 அன்று, சாவந்த் தலைமையிலான அரசாங்கத்தில் ஒரு அமைச்சர் “பாலியல் சீண்டலில்” ஈடுபட்டதாக காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோதங்கர் குற்றம் சாட்டியிருந்தார், மேலும் அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பாஜக அரசுக்கு 15 நாட்கள் அவகாசம் தருவதாகக் கூறினார்.

பதினைந்து நாட்கள் கழித்து அரசாங்கம் அமைச்சரை அமைச்சரவையில் இருந்து நீக்கவில்லை என்றால், அவர் பெயரைச் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் சோதங்கர் எச்சரித்திருந்தார்.

இதையடுத்து கோவா காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோதங்கர் நேற்று கூறுகையில், ‘மிலிந்த் நாயக் தனது அமைச்சரவை உறுப்பினர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஒரு பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். முதல்வர் சாவந்த் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் மிலிந்த் நாயக்குக்கு எதிரான குற்றச்சாட்டை போலீசார் விசாரிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் மிலிந்த் நாயக் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மிலிந்த் நாயக் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளதை முதல்வர் பிரமோத் சாவந்த் உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்காக மிலிந்த் நாயக் கோவா அரசாங்கத்தில் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : 👇

இதுகுறித்து நேற்று இரவு கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறுகையில், ‘சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணைக்காக நாயக் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். நான் அதை ஏற்றுக்கொண்டேன். அவர் மீதான குற்றச்சாட்டுகள் தனிப்பட்டவை. அதற்கு அவர் என்ன செய்வார் என்பது அவரது தனிப்பட்ட முடிவு. காங்கிரஸ் என்ன ஆதாரம் கொடுத்தாலும் விசாரிக்கப்படும். விசாரணையில் அரசு என்ன உதவி செய்ய முடியுமோ அதை நூறு சதவீதம் செய்யும்.’ எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here