கோலப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு பாகிஸ்தான் தொடர்பா?

0
407

சென்னையில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதியன்று பெசன்ட் நகர் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டு போராட்டம் நடத்திய பெண் ஒருவருக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பது குறித்து விசாரிக்கப்படும் என காவல்துறை ஆணையர் தெரிவித்ததற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை பெசன்ட் நகர் பகுதியில் டிசம்பர் 29ஆம் தேதியன்று சிலர் தெருக்களில் கோலமிட்டு, அந்தக் கோலத்திற்கு முன்பாக ‘No CAA, No NRC’ என எழுதி தங்களது எதிர்ப்பைப் பதிவுசெய்தனர்.

இதையடுத்து இவர்கள் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

இந்த நிலையில், புதன்கிழமையன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் செய்தியாளர்களைச் சந்தித்து சென்னை நகரத்தில் நடந்த குற்றங்கள், புலனாய்வில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவை குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

அப்போது, செய்தியாளர் ஒருவர் கோலம் போராட்டம் தொடர்பாக கேள்வியெழுப்பும்போது, அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவருக்கு பாகிஸ்தானுடன் தொடர்பிருப்பதாக சொல்லப்படுகிறதே என்று கேட்டார்.

இதற்குப் பதிலளித்த ஆணையர், “`கோலம் போடும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் விவரங்கள் சோதனை செய்யப்பட்டன. அவர்களில் காயத்ரி கந்தாடை என்ற பெண்ணின் ஃபேஸ்புக் பக்கத்தில், பைட்ஸ் ஃபார் ஆல் என்ற பாகிஸ்தான் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிறுவனம், அசோஷியேசன் ஆஃப் ஆல் பாகிஸ்தான் சிட்டிசன் ஜர்னலிஸ்ட் என்ற அமைப்பைச் சேர்ந்தது. காயத்ரி எந்த அளவுக்குப் பாகிஸ்தானுடன் தொடர்பில் உள்ளார் என்ற விவரங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது,” என்று குறிப்பிட்டார்.

கோலப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு பாகிஸ்தான் தொடர்பா?

மேலும், “அறப்போர் இயக்கம், வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா போன்ற இயக்கங்களும் இதற்கு ஆதரவாக உள்ளன. இதுபற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றும் ஆணையர் தெரிவித்தார்.

இந்தச் செய்தி வெளியான பிறகு, தங்களை பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்திப் பேசுவதற்கு அறப்போர் இயக்கம் உடனடியாகக் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில், பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாக ஆணையரால் குற்றம்சாட்டப்பட்ட காயத்ரி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவருடன் மூத்த வழக்கறிஞர் வைகை, சுதா ராமலிங்கம், ஆய்வாளர் வ. கீதா, வழக்கறிஞர் மோகன், அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் ஆகியோரும் இருந்தனர்.

முதலில் பேசிய வழக்கறிஞர் வைகை, “போராடுவதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆணையர் செய்தியாளரைச் சந்திக்கும்போது வேண்டுமென்றே இதுபோல கேள்வியைக் கேட்க வைத்து, காயத்ரிக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் இனிமேல்தான் விசாரிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். ஒரு விஷயம் அவருடைய விசாரணையில் இருக்கிறது என்றால், அதைப் பற்றி வெளியில் பேசியிருக்க்கூடாது” என்று கூறினார்.

மேலும், “மனித உரிமை ஆர்வலராக உள்ள ஒரு பெண்ணைப் பார்த்து, பாகிஸ்தானுடன் தொடர்பு இருக்கிறது எனப் பேசுவது என்ன நியாயம்? அவருக்கு எதாவது நேர்ந்தால், யார் பொறுப்பு?” என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பேசிய சமூக ஆர்வலரும் ஆய்வாளருமான வ. கீதா, “பாகிஸ்தான் என்பது கெட்ட வார்த்தையில்லை. அங்கு செல்லக்கூடாது என ஒரு தடையும் இல்லை. ஆகவே இம்மாதிரியெல்லாம் குற்றம்சாட்டக்கூடாது” என்றார்.

கோலப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு பாகிஸ்தான் தொடர்பா?

அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் பேசும்போது, “காயத்ரி இந்த கைது விவகாரத்திற்குப் பிறகு மு.க. ஸ்டாலினைச் சந்தித்தார். ஆனால், தி.மு.கவைத் தொடர்புபடுத்திப் பேசாமல், எங்களை தொடர்புபடுத்தி பேசுகிறார்கள்” என்றார்.

பாகிஸ்தானுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு என காயத்ரியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “நான் தெற்காசியாவில் மத ரீதியாக ஒடுக்கப்படுபவர்கள் குறித்து ஆய்வுசெய்து வருகிறேன். பாகிஸ்தானில் அஹமதியாக்கள், பங்ளாதேஷில் மத ரீதியாக ஒடுக்கப்படுபவர்கள் என ஆராய்ச்சி செய்து அறிக்கை சமர்ப்பித்திருக்கிறேன். அதைத்தான் என் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டிருக்கிறேன். இதை ஆய்வுசெய்யவே நான் பாகிஸ்தான் சென்றிருக்கிறேன். இதற்காக என் பெயரைக் குறிப்பிட்டு, என்னைப் பற்றிய தகவல்களை வெளியிடுவது என்ன நியாயம்? எனக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாகக் கருதினால், என்னை அழைத்து விசாரித்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் ஒரு செய்தியாளர் சந்திப்பில் இப்படிப் பேச வேண்டிய அவசியம் என்ன?” எனக் கேள்வியெழுப்பினார்.

இது தொடர்பாக சட்ட ரீதியாக என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென ஆலோசித்துவருவதாகவும் சுதா ராமலிங்கம், வைகை உள்ளிட்ட வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

நன்றி : bbc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here