வங்கக் கடலில் உருவான கஜா புயல் நாகையில் கரையை கடந்தது. 110 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றுடன் மழையும் கொட்டியதால் நாகை, தஞ்சை, திருவாரூர் உட்பட 6 மாவட்டங்களில் கஜா கோரதாண்டவம் ஆடியது. இதனால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.

பல்லாயிரக்கணக்கான மின்கம்பங்களும், லட்சக்கணக்கான மரங்களும் சாய்ந்தன. காற்றின் வேகம் 110 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் இரவு 6 மணி முதல் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

_104390497_img_6239

புயல் கரையை கடந்தபோது கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மரங்கள், மின்கம்பங்கள், செல்போன் டவர்கள் சாய்ந்தன. நாகை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, கீழ்வேளூர் மற்றும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் காற்று பலமாக வீசியது.

சேதுபாவாசத்திரம், பேராவூரணி ஆகிய பகுதிகளில் இருந்த தென்னந்தோப்புகள் சேதமானது. இவற்றில் 1 லட்சம் தென்னைமரங்கள் சாய்ந்தது. கடலோர கிராமங்களில் கடந்த 15ஆம் தேதி பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் அப்பகுதிகளில் கடல் நீர் கிராமங்களில் புகுந்ததால் குடியிருப்பு வீடுகள் தண்ணீர் சூழ்ந்தது. 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அப்பகுதிகளில் கடந்த நான்கு தினங்களாக மின் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் இருளில் முழ்கிய மக்கள் இரவு நேரங்களில் விஷ ஜந்துக்கள் மற்றும் கொசு தொல்லையால் மிகுந்த அவதியுற்று வருகின்றனர்.

மேலும் கடல் நீர் உட்புகுந்ததால் சுகாதார நீர் கேடு ஏற்ப்பட்டுள்ளது.

கடந்த 15ஆம் தேதி இரவு கஜா புயல் கரையைக் கடக்கும் போது அப்பகுதி குடிசை வீடுகள் காற்றில் பறந்தது சில வீடுகள் இடிந்து விழுந்தது இதனால் இரவு தூங்கிக் கொண்டிருந்த மக்கள் தங்களது உயிர்களை காப்பற்றி கொள்ள பச்சிளங் குழந்தைகளுடன் உடமைகளை விட்டு விட்டு வெளியே தப்பி வந்துள்ளனர்.

_104390499_img_6241

இது குறித்து பிபிசியிடம் தமிழிடம் பேசிய அழகு முத்து, “விடியற்காலையில் தீடீரென பலத்த காற்றுடன் மழை கொட்டியது. வீட்டீன் கதவை திறந்து வெளியில் செல்லவும் முடியவில்லை. பெரும்பாடுபட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இரண்டு பிள்ளைகளையும் தூக்கிக் கொண்டு வெளியே வந்தேன். இரண்டு நாளாக பட்டினி கிடந்தோம்” என்கிறார்.

மேலும், “உயிரை காப்பாற்றிக் கொள்ள வெளியே ஓடி வந்தோம். இப்போது உடமைகள் ஏதும் இன்றி மாற்று துணியும் இன்றி துயரப்படுகிறோம்” என்றார் அவர்.

“இந்த புயல் இந்த பக்கம் வராதுன்னு சொன்னாங்க நாங்க ரொம்ப தைரியமா இருந்தோம் ஆனால் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தினால் எங்கள் காலனியில் இருக்கும் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து போனது. மூன்று நாட்களாக குடிநீர் மற்றும் மின்சாரம் ஏதுமின்றி இருக்கிறோம் என்கிறார்” அறிவுமதி.
வெள்ளத்தில் பாதித்த அறிவுமதி மற்றும் அவரின் பிள்ளைகளை அக்கம்பக்கத்தினர் கயிறு கொண்டு இழுத்து வெளியே மீட்டுள்ளனர்.

“இந்த புயல் வந்ததிலிருந்து இந்த பகுதியில் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடைகள் திறக்கப்படவில்லை. மக்கள் பசியும் பட்டினியுமாக உள்ளனர். கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த படகுகள் சேதமாயின. இதனால் வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

நாங்கள் பத்து நாட்களாக கடைகளை திறக்காமல் உள்ளோம். இதனால் எங்களுக்கும் வருமானம் இல்லை” என்கிறார் அப்பகுதி வர்த்தக சங்க தலைவர் காதர்பாட்ஷா.

Courtesy : BBC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here