உத்தரப் பிரதேச மாநிலம் பாபா ராகவ்தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, அக்கல்லூரியின் தலைவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கோராக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்குள் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை நடத்திய அம்மாவட்ட நீதிபதி ராஜீவ் ரவுதலா, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தார். எனினும் இதனை மறுத்துள்ள மாநில அரசு, நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் குறித்து முக்கிய எதிர்க்கட்சிகளான, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள், யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசைக் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் அம்மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய பகுஜன் சமாஜ் கட்சியின் இளைஞரணியினர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மருத்துவக் கல்லூரியின் தலைவரைப் பணியிடை நீக்கம் செய்து, அம்மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் ஆசுதோஷ் டண்டன் தெரிவித்துள்ளார். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைக்குப் பின்னர், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையும் படியுங்கள்: சிலுக்குவார்பட்டி சிங்கத்தின் ஜோடியாகும் ஓவியா

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்