சிலைகள் திருட்டு போன வழக்கில் முன் ஜாமீன் கேட்டு டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் மனு தாக்கல் செய்ததில் 6 வார காலத்திற்கு அவரை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மயிலாப்பூரில் சிலைகள் வழக்கில் தன்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கேட்டு டிவிஎஸ் குழும் தலைவர் வேணு சீனிவாசன் மனு தாக்கல் செய்ததில், 6 வார காலத்திற்கு அவரை கைது செய்யகூடாது என்று உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சிலைக்கடத்தல் விசாரணையை சிபிஐக்கு மாற்றும் அரசின் முடிவை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசனையும் எதிர்மனுதாரராக சேர்த்திருந்தார். எந்த அடிப்படையில் அவரை சேர்த்துள்ளீர்கள் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியபோது, 2004-ஆம் ஆண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் புனரமைக்கப்பட்டபோது முறைகேடு நடந்ததாகவும், அங்கிருந்த கோவில் சிலைகள், புராதன பொருட்கள் காணாமல் போனதாக எழுந்த புகாரை அடுத்து மயிலாப்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் டிவிஎஸ் குழும் தலைவர் வேணு சீனிவாசன் முன் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்தார். வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது வேணு சீனிவாசன் தரப்பில் சிலைகள் முறைகேடு சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்ததாக தெரிவிக்கப்பட்டது.

தனக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை, 2004-ஆம் ஆண்டு கோயில் புனரமைப்பு நடந்த போது அறப்பணிகள் குழு உறுப்பினராக தான் சேர்க்கப்பட்டதாகவும், அப்போது தனது சொந்த செலவில் ரூ.70 லட்சத்தில் கோயிலுக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட மற்ற பணிகள் செய்யப்பட்டதாகவும், இது தவிர தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டிருப்பதாகவும் டிவி எஸ் வேணு சீனிவாசன் தெரிவித்தார்

மேலும் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாக அறங்காவலராக 2015-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டபோது கோவில் கும்பாபிஷேகத்திற்கு திருப்பணி குழு தலைவர் என்ற அடிப்படையில் ரூ.25 கோடி செலவில் திருப்பணிகள் செய்ததாகவும் தெரிவித்திருந்தார். மயிலாப்பூர் கோயில் சிலை தொடர்பாக சிலைகடத்தல் தடுப்பு பிரிவினர் தன்னை கைது செய்யலாம் என்பதால் முன் ஜாமீன் வழங்க கேட்டார் .

இந்த வழக்கில் ஆஜரான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் வேணு சீனிவாசனை 6 வார காலத்திற்கு கைது செய்ய மாட்டோம் என்று உறுதியளித்தனர். அந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து 6 வார காலத்திற்கு கைது செய்ய தடைவிதித்த உயர் நீதிமன்றம் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 6 வார காலத்திற்கு ஒத்திவைத்தது.

Courtesy : Economic Times

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here