கோயில் இடிக்கப்பட்டதை கண்டித்து தலித்துகள் போராட்டம்; பீம் ஆர்மி தலைவர் உட்பட 91 பேர் கைது

0
155

டெல்லியின் துக்ளகாபாத்தில் கடந்த 10-ம்தேதி உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் இடிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கோயிலை இடம் அல்லது வேறு இடத்தில் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ஆன்மிகவாதியும், தலித் சமூக தலைவருமான ரவிதாசுக்கு கட்டப்பட்டிருந்த கோயில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இடிக்கப்பட்டது. இதனை கண்டித்து ஆயிரக்கணக்கான தலித் அமைப்பினர் டெல்லியில் போராட்டத்தில் குதித்தனர். போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டதை தொடர்ந்து பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் உட்பட  91 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

15-ஆம் நூற்றாண்டை சேர்ந்த பக்தி இயக்க ஆன்மிக  தலைவர்களில் ரவிதாசும் ஒருவர் ஆவார். அவர் சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாகிப்பில் சில வசனங்களையும் எழுதியிருக்கிறார். அவரது பெயரில் ரவிதாசியா என்ற மதம் ஒன்றும் 21-ஆம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

அவருக்கு டெல்லியின் துக்ளகாபாத்தில் கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதனை அகற்றக் கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து கோயில் இடிக்கப்பட்டது. 

இந்த சம்பவம் தலித் அமைப்பினர் மற்றும் ரவிதாசின் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து புதன்கிழமை டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான போராட்டக்காரர்கள் டெல்லியில் குவிந்து போராட்டம் நடத்தினர். 

 தலித் அமைப்பான பீம் ஆர்மியின் தலைவர் சந்திர சேகர் ஆசாத் தலைமையில் இந்த போராட்டங்கள் நடைபெற்றன.  இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து 90 பேரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காக காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தலித்துகள் மீது அடக்குமுறையை அரசு கையாளுகிறது. இது உணர்வுப்பூர்வமான விஷயம். 

கோடிக்கணக்கான தலித் சகோதர சகோதரிகளின் கலாச்சார அடையாளமாக ரவிதாஸ் இருக்கிறார். அவருக்கு கட்டப்பட்ட கோயில் விவகாரத்தில் பாஜக அரசு தொடர்ந்து குழப்பம் செய்தது. இதனை எதிர்த்து டெல்லியில் குரல் கொடுத்த தலித் மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.