பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயவி ரவி நடித்துள்ள படம் கோமாளி. ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.

16 வருடங்கள் கோமாவில் இருந்த ஜெயம் ரவி எழுந்திருப்பது போல காட்சியில் டிவியில் “நான் அரசியலுக்கு வருவது உறுதி” என்று ரஜினிகாந்த் கூறும் வீடியோவைப் போட்டுக்காட்டுகிறார் யோகி பாபு. அதைப்பார்த்து ஜெயம் ரவி பதற்றத்துடன் “ஏய், இது 96. யாரை ஏமாத்துறீங்க” என்று கேட்பதாக டிரெய்லர் முடிவடைகிறது.

இந்நிலையில், இந்தக் காட்சிக்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்தக் காட்சியை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், “ ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று சர்ச்சைக்குரிய அந்தக் காட்சி நீக்கப்படும்” என்று கூறினார்

தற்போது ஜெயம் ரவி ‘கோமாளி படத்தின் ட்ரெய்லருக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் குறித்த காட்சி அவருடைய ரசிகர்களின் மனதை புன்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியானது. நான் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன். அவருடைய அரசியல் வருகை குறித்து மற்றவர்களை போல நானும் ஆவலாக காத்திருக்கிறேன்.

நாங்கள் அனைவரும் அவருடைய படங்களை பார்த்து வளர்ந்தவர்கள். அவருடைய பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. நல்ல நோக்கத்திற்காகத் தான் அந்த காட்சியை வைத்தோம். எனினும் அந்த காட்சி சிலர் மனதை புன்படுத்தியிருப்பதால் அந்த காட்சியை படத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளோம்.

மேலும் கோமாளி படத்தின் டிரெய்லரை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் எங்கள் குழுவை பாராட்டினார். புதுமுயற்சியாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.