2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் நிலையத்தில் , சபர்மதி விரைவு ரயில் பெட்டிக்கு தீ வைத்து 59 பேர் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோத்ரா ரயில் தீ வைப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளிகள் 5 பேரும், வழக்கு விசாரணைகள் முடிந்த நிலையில் கைது செய்யப்பட்டதால் அவர்கள் மீதான விசாரணை அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிந்து இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், பரூக் பனா, இம்ரான் ஷேரு ஆகியோர் குற்றவாளிகள் என்று அறிவித்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மீதமுள்ள 3 பேரும் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பளிக்கப்பட்டது.

இவ்வழக்கில், 2011 ஆம் ஆண்டு , சிறப்பு நீதிமன்றம் 31 பேருக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. குற்றம் சாட்டப்பட்ட 31 பேரில் 11 பேருக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. 2017 இல் குஜராத் உயர்நீதிமன்றம் மரணத் தண்டனைப் பெற்ற 11 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக அறிவித்தது.

*குஜராத் மாநிலம், கோத்ரா ரயில் நிலையம் அருகே 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதியன்று சபர்மதி விரைவு ரயில் நின்று கொண்டிருந்தது.

*அந்த ரயிலின் எஸ்-6 பெட்டிக்கு மர்ம கும்பல் ஒன்று தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றது. இதில் அந்த பெட்டியில் இருந்த 59 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர், உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்திக்கு யாத்திரை சென்றுவிட்டு திரும்பிய கரசேவர்கள் ஆவர்.

*இதையடுத்து, குஜராத் முழுவதும் மூண்ட மதக் கலவரத்தில், சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர்.

*கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்கு நீதிபதி நானாவதி தலைமையிலான ஆணையத்தை அப்போதைய குஜராத் அரசு அமைத்தது.

*நீதிபதி நானாவதி ஆணையம் நடத்திய விசாரணையில், சபர்மதி விரைவு ரயிலின் எஸ்-6 பெட்டியில் ஏற்பட்ட தீக்கு, விபத்து காரணமில்லை; யாரோ அதற்கு தீ வைத்துள்ளனர் என்பது தெரிய வந்தது.

*இந்த வழக்கை விசாரித்த எஸ்ஐடி (SIT) சிறப்பு நீதிமன்றம், 11 பேருக்கு தூக்குத் தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1-ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது. 63 பேரை விடுதலை செய்தும் எஸ்ஐடி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கோத்ரா ரயில் சம்பவத்துக்கு முக்கிய காரணகர்த்தாவாக சந்தேகிக்கப்படும் மௌலானா உமர்ஜித், முகம்மது அன்சாரி, நானுமியா சௌதுரி ஆகியோரும் அடங்குவர்.

* சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, எஸ்ஐடி அமைப்பும், தண்டனை விதிக்கப்பட்ட 31 பேரும் குஜராத் உயர் நீதிமன்றத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

*மனுக்களை விசாரித்த நீதிமன்றம், 11 பேருக்கு தூக்குத் தண்டனையை கடுங்காவல் ஆயுள் சிறைத் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது. 20 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. 63 பேரை விசாரணை நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து (எஸ்ஐடி சார்பில்) தாக்கல் செய்யப்பட்ட மனுவையும், தண்டனையை எதிர்த்து (குற்றம்சாட்டப்பட்டோர்) தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தது.

(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here