பிரபல பத்திரிகையாளர் கோட்டா நீலிமா எழுதிய நாவல், ஷுஸ் ஆஃப் தி டெட். மகாராஷ்டிர மாநிலம் விதர்ப்பா பகுதி விவசாயிகளின் தற்கொலையை பின்னணியாக வைத்து எழுதப்பட்ட இந்த நாவல், அது வெளியான போது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நாவலை அடிப்படையாக வைத்து இந்தியில், பீப்லி லைவ் திரைப்படம் வெளியானது. அமீர் கான் படத்தை தயாரித்திருந்தார்.

இந்த நாவலின் உரிமையை வெற்றிமாறன் வாங்கியுள்ளார்.

விசாரணை படத்துக்கு கிடைத்த பாராட்டுகள் வெற்றிமாறனை சமூக பிரச்சனைகளை நோக்கி ஈர்த்துள்ளது. பல வருடங்களாக அவர் கூறிவரும் வடசென்னை படத்தைதான் அவர் அடுத்து இயக்கவுள்ளார் என்றாலும், அவரது மனதுக்குப் பிடித்த வேறொரு கதை அமைந்தால், அதனை படமாக்க அவர் தயாராக இருப்பதாகவே தெரிகிறது. சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் நாவலின் உரிமையை அவர் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஷுஸ் ஆஃப் தி டெட் நாவலின் உரிமையையும் வாங்கியுள்ளார்.

அதேநேரம், இன்னொரு சந்தேகமும் எழுந்துள்ளது. பிறமொழி நாவல்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்பதற்காகவே ஒரு பதிப்பகத்தை தொடங்கி, சீன நாவலான, வூல்ஃப் டோட்டத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு உரிமையை வாங்கினார் வெற்றிமாறன். எழுத்தாளர் சி.மோகன் இந்த நாவலை ஓநாய் குலச்சின்னம் என்ற பெயரில் தமிழில் மொழிப்பெயர்த்தார். அந்த பதிப்பு வேலையின் தொடர்ச்சியாக அவர் கோட்டா நீலிமாவின் நாவலின் உரிமையை வாங்கியதாகவும் சிலர் கூறுகின்றனர்.

விரைவில் வெற்றிமாறனே இந்த குழப்பத்தை தீர்த்து வைப்பார் என நம்புவோம்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்