ரஜினியின் கோச்சடையான், லிங்கா, கபாலி படங்கள் நஷ்டமடைந்ததாக ட்விட்டரில் வலம் வரும் செய்தி தொடர்பாக போலீசில் புகார் அளிக்கவிருப்பதாக விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறினார்.

ரஜினி படங்களும் அதன் நஷ்டக்கணக்குகளும் தமிழகத்தில் பிரபலம். கோச்சடையான் படத்துக்காக வாங்கிய 8.5 கோடி ரூபாயை ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் இன்னும் திருப்பித் தராததற்கு சமீபத்தில் கோர்ட் அவரைக் கண்டித்ததுடன், உடனடியாக பணத்தை த்திருப்பித்தர வலியுறுத்தியது.

லிங்கா படம் வெளியான நான்காவது நாளே படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள் கடும் நஷ்டம் என போர்க்கொடி உயர்த்தினர். கடைசியில் ரஜினி அவர்களின் கோரிக்கையை ஏற்று சில கோடிகள் நஷ்டஈடு தந்தார்.

கபாலி படம் 300 கோடிகளை வசூலித்தது என்கிறார்கள். ஆனால், சிலர் கபாலி முதல் சி3 வரை அனைத்துப் படங்களுமே நஷ்டம் என்கிறார்கள். இதில் யார் சொல்வது உண்மை, யார் சொல்வது பொய் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியுமா என்பது சந்தேகம்.

விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் தனது ட்விட்டர் பக்கத்தில் கோச்சடையான் 26.5 கோடிகள் நஷ்டம், லிங்கா 26 கோடிகள் நஷ்டம், கபாலி 20 கோடிகள் நஷ்டம் என்று ட்வீட் செய்ததாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. திருப்பூர் சுப்பிரமணியம் ரஜினியின் நண்பர். லிங்கா பிரச்சனையில் ரஜினி தந்த பணத்தை பங்கிட்டு கொடுத்தவர்களில் ஒருவர். அவர் இப்படி ட்வீட் செய்வாரா?

“இதுபோன்ற புள்ளி விவரத்தை நான் ட்விட்டரில் பதிவிடவில்லை. நான் பதிவிட்டது போல் போலியாக தயார் செய்து பரப்பி வருகிறார்கள். இது குறித்து வரும் செவ்வாய்க்கிழமை காவல்துறையில் புகார் செய்ய இருக்கிறேன்” என்று திருப்பூர் சுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here