கொரோனா தொற்று பரவலின் 3-ஆவது அலை இரு வாரங்களில் உச்சம் தொடும் என சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி) கணித்துள்ளது.
கொரோனா தொற்றின் 3-ஆவது அலை நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. முக்கியமாக ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றின் 3-ஆவது அலை பரவல் குறித்து கணித அடிப்படையிலான ஆய்வை சென்னை ஐஐடி மேற்கொண்டது.
கடந்த டிசம்பர் மாத கடைசி வார நிலவரப்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட நபர் மூலமாக 2.9 நபர்களுக்கு அத்தொற்று பரவ வாய்ப்பிருந்ததாகவும், ஜனவரி முதல் வாரத்தில் அந்த மதிப்பு (ஆர் மதிப்பு) 4-ஆக அதிகரித்து, பின்னர் 2-ஆவது வாரத்தில் 2.2-ஆக குறைந்ததாகவும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 14-ஆம் தேதிமுதல் 21-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ‘ஆர்’ மதிப்பு 1.57-ஆக குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஆர்’ மதிப்பு மும்பையில் 0.67-ஆகவும், தில்லியில் 0.98-ஆகவும், சென்னையில் 1.2-ஆகவும், கொல்கத்தாவில் 0.56-ஆகவும் உள்ளது.
‘ஆர்’ மதிப்பு ஒன்றைவிடக் குறைந்தால் தொற்று பரவல் கட்டுக்குள் வந்துவிடும் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக சென்னை ஐஜடி கணிதத் துறை இணைப் பேராசிரியர் ஜெயந்த் ஜா கூறுகையில், “மும்பை, கொல்கத்தா நகரங்களில் கொரோனா தொற்று ஏற்கெனவே உச்சமடைந்துவிட்டதை ‘ஆர்’ மதிப்பு உணர்த்துகிறது. டெல்லி, சென்னை நகரங்களில் இன்னும் கொரோனா தொற்று பரவி வருகிறது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளத் தேவையில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) விதிகளை மாற்றியுள்ளதால், தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். தற்போதைய ஆய்வின்படி கொரோனா தொற்றின் 3-ஆவது அலை பிப்ரவரி 6-ஆம் தேதிக்குள் உச்சமடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது” என்றார்.