இந்தியாவில் கொரோனா 3ம் அலை அக்டோபர் மாதத்தில் உச்சம் பெறலாம் என்று மத்திய அரசின் நிபுணர்கள் குழு எச்சரித்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் நிபுணர்கள் கொண்ட குழுவினர் கொரோனா தடுப்பு குறித்த முன்னெச்சரிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை அளித்து வருகிறது.தற்போதைய சூழலில் அனைத்து மாநிலங்களும் கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு தேசிய நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில் 3வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்பதால் குழந்தைகளுக்கான சிகிச்சைகளுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்திடுமாறு அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் சிறிது சிறிதாக அதிகமாகி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள நிபுணர் குழு, கொரோனா 2ம் அலையின் தாக்கத்தில் பாதியளவேனும் 3ம் அலையில் இருக்கக் கூடும் என்று கணித்துள்ளது. எனவே தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தவும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்றிடவும் வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள், வென்டிலேட்டர்கள், மருத்துவர்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஆக்சிஜனை இருப்பு வைக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளது.  மேலும் இணை நோய்கள் இருக்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அவசியம் என்றும் நிபுணர் குழு குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here