இந்தியா உள்பட 62 நாடுகள், கொரோனா வைரஸ் நோய் பரவல் குறித்தும், இது தொடர்பான உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும் விசாரணை நடத்தத் தீர்மானம் கொண்டு வருகின்றன.சீனாவில் உகான் மாநகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் 100 நாடுகளுக்குப் பரவியது.

அதிகமாக நோய் பாதித்த அமெரிக்கா, இந்த நோய் பரவலுக்குச் சீனாவே காரணம் என்று குற்றம்சாட்டியது. மேலும், உலக சுகாதார நிறுவனம் சரியான நேரத்தில் உலக நாடுகளை எச்சரிக்கத் தவறியதாகவும், சீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார். உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியையும் நிறுத்தினார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலுக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென ஆஸ்திரேலியா கோரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் இணைந்து உலக சுகாதார அமைப்பில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருகின்றன. இதில் இந்தியா, ஜப்பான், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்கொரியா, பிரேசில், கனடா உள்பட 62 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

இந்த வரைவு தீர்மானத்தில், கோவிட்19 பரவலுக்கான காரணங்கள், இது குறித்துச் சரியான நேரத்தில் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்ததா? அந்நிறுவனம் வெளியிட்ட தகவல்கள் போன்றவை குறித்து பாரபட்சமற்ற, சுதந்திரமான, விரிவான விசாரணை நடத்த வேண்டும். உறுப்பினர் நாடுகளின் கருத்துக்களைக் கேட்டு அதற்கேற்ப விசாரணை நடைபெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனினும், சீனாவைப் பற்றியோ, உகான் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இது குறித்து ஆஸ்திரேலியா வெளியுறவு அமைச்சர் மாரிஸ் பெய்னே கூறுகையில், வருங்காலத்தில் இது போன்ற மோசமான தொற்று நோய் வரும் முன்பே உலக மக்களைப் பாதுகாப்பதற்கு இந்த விசாரணை உதவும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here