கொரோனா வைரஸ்: ஊரடங்கு உத்தரவுக்கும் 144 தடை உத்தரவுக்கும் என்ன வேறுபாடு?

0
744

சட்டம், ஒழுங்கு மற்றும் அமைதியை நிலைநாட்டும் காலங்களில் தேவைக்கு ஏற்ப ஊரடங்கு உத்தரவை இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தின்படி அரசு காவல்துறை மூலம் அமல்படுத்தும். 144 தடை உத்தரவின் நீடித்த நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவை குறிப்பிடலாம். இந்த இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்றாலும், சூழ்நிலை, நேரம், காலத்துக்கு தக்கவாறு நடவடிக்கையின் தன்மை அமையும்.

ஊரடங்கு உத்தரவு என்றால் என்ன?

அசாதாரணமான சூழ்நிலைகளில் பதற்றத்தை தணிக்க முடியாத நிலை எழும்போது, மாவட்ட நிர்வாகம், காவல்துறை மூலம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.

இனம் அல்லது சமுதாயம், ஜாதி கலவரங்கள், வன்முறை, சட்ட எதிர்ப்பு, நோய் பரவல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான தேவையின்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.

ஊரடங்கு உத்தரவை மாவட்ட நிர்வாக தலைவரான மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு நிர்வாகம் – அமைதியை நிலைநாட்ட முடியாத சூழலில் பயன்படுத்தும்.

மக்களின் எவ்வித நடமாட்டத்தையோ, கல்வி நிலையங்கள், தொழில் நிறுவனங்கள், அரசுத்துறைகள் போன்றவை செயல்பட அனுமதி மறுக்கப்படும். அத்தியாவசிய சேவைகளான காவல்துறை, அவசர ஊர்தி வாகனங்கள், தீயணைப்புத்துறை ஆகியவை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும்.

ஊரடங்கு காலத்தில் உண்ணாவிரதம், போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்துவதற்கு அனுமதி கிடையாது.

ஊரடங்கு உத்தரவுக்கும் 144 தடை உத்தரவுக்கும் என்ன வேறுபாடு?

முக்கிய நபர்களை தடுத்து வைக்கவும், சந்தேக நபர்களை கைது செய்யவும் இந்த நடவடிக்கை வழிவகுக்கும்.

ஊரடங்கு உத்தரவு, குறிப்பிட்ட காலத்திலிருந்து எவ்வளவு காலத்துக்கு வேண்டுமானாலும் நீட்டிக்கப்படலாம். அதற்கு நியாயமான காரணங்களை அரசு தரப்பு கொண்டிருக்க வேண்டும். அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் குடிமக்களுக்கு சட்ட உரிமை உண்டு.

144 பிரிவு என்ன கூறுகிறது?

இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தின் 144-ஆவது பிரிவே, 144 தடை உத்தரவு என்று பொதுவாக அழைக்கப்படுகிறது.

இந்த தண்டனை சட்டப்பிரிவின்படி பொதுமக்கள், நான்கு அல்லது அதற்கு மேலானோர், பொது இடத்திலோ, மக்கள் கூடுவதற்கு தடை செய்யப்பட்ட பகுதியிலோ கூடுவது குற்றமாக கருதப்படும்.

குறிப்பிட்ட சில பகுதிகளில் அல்லது காவல்துறை வரையறுத்துள்ள இடங்களில் நான்கு அல்லது அதற்கு மேலானோர் கூடுவதற்கு இந்த சட்டப்பிரிவு தடை விதிக்கும் அதே சமயம், ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவசர தேவைக்காக செல்வதை இந்த சட்டப்பிரிவு தடுக்காது.

ஆயுதங்களை கொண்டு வரவும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு பொருளையும் வைத்திருக்கவோ, அவற்றைக்கொண்டு பொதுவெளியில் நடமாடவோ அனுமதி கிடையாது.

குறிப்பிட்ட காலத்துக்கு, அதாவது அதிகபட்சமாக ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த உத்தரவை மாவட்ட நிர்வாக தலைமை அமல்படுத்த வேண்டுமானால், அதற்கு அரசின் அனுமதி அவசியம்.

டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், பிரதமர் இல்லம், விமான நிலையங்கள் போன்ற பகுதிகளில் 144 தடை உத்தரவு எல்லா காலங்களிலும் அமலில் உள்ள வகையில், அது நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.

நன்றி :  bbc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here