தற்போது பரவி வரும் கொரோனா தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டதால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், குறிப்பாக பள்ளிக்குழந்தைகள் மீது பெற்றோர்கள் தனி கவனம் செலுத்தி கண்காணிப்பது அவசியம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.
மறைந்த கவிஞர் கண்ணதாசனின் 96வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் செய்தித்துறை அமைச்சர் மூப்பை சாமிநாதன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்கள், தமிழ்நாடு அரசின் அரசவை கவிஞராக, தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்த்தவர் கவிஞர் கண்ணதாசன் என்று கூறினார். அதிமுக பொதுக்குழு குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என முதலமைச்சர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். அதிமுகவின் தற்போதைய நிலை நகைச்சுவையாக மாறியிருக்கிறது. நடக்கும் அத்தனையும் மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள் என கூறினார்.
கொரோனா பரவல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தினசரி 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, டெல்லி போன்ற இடங்களில் தொற்று இரட்டிப்பாகியுள்ளது, 50 சதவீதம் தொற்று அதிகரித்துள்ளது.
ஒமைக்ரானை பொருத்தவரை பிஏ -1, 2, 3 உள்ளிட்ட ஏழு வகையான தொற்று பரவி வருவதாகவும் தற்போது அதிகளவில் பிஏ 4, 5 வகைகளில் வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. மேலும் பிஏ 4, 5 வைரஸ் தொற்று உயிர் கொல்லியாக இல்லாமல் வேகமாக பரவும் தன்மை கொண்டதாக உள்ளது.
தமிழகத்தில் (23/06/22) நேற்று ஒரு நாளில் 1600 நபர்களுக்கு தொற்று பாதித்துள்ளது. குறிப்பாக 92% நபர்கள் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் 8 சதவீத நபர்கள் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை ராஜீவ் காந்தி ஸ்டான்லி கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் கொரோனா தனிப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. கிண்டி கிங்ஸ் மருத்துவமனை உறுதித் தன்மை குறித்த அறிக்கை விரைவில் வரும், கிங்ஸ் மருத்துவமனையில் மீண்டும் கொரோனா சிகிச்சைக்காக மாற்றுவதற்காக திட்டமிடப்பட்டு வருகிறோம்.
தற்போதையை சூழலில் தொற்று ஏற்படுவது அதிகரித்தாலும் உயிர் பாதிப்பு என்பது குறைவாகவே உள்ளது எனவும் அதேபோல் தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டதால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும், குறிப்பாக பள்ளிக்குழந்தைகள், சிறுவர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுவது அவசியம். பள்ளி செல்லும் குழந்தைகளின் மீது பெற்றோர்கள் தனி கவனம் செலுத்தி கண்காணிப்பது அவசியம் என்றும் கூறினார்.
அலட்சியமாக இருந்தால் மற்ற குழந்தைகளுக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது எனவே பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். சென்னையில் 122 இடங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் தோற்று பாதித்தவர்களாக இருக்கிறார்கள்.
குறிப்பாக அந்த இடங்களில் மாநகராட்சி சார்பாக நோட்டீஸ் ஒட்டப்பட்டு கண்காணிக்கபட்டு வருகிறது. தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தாலும் தற்போதைக்கு புதிய கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. மக்கள் எச்சரிக்கையாக இருந்தால் போதுமானது என்றும் கூறினார்.