கொரோனா தடுப்பூசி 2024 வரை போதுமான அளவில் கிடைக்காது – சீரம் இன்ஸ்டிட்யூட் தலைமை செயல் அதிகாரி

Adar Poonawalla’s remarks came a day after Union health minister Harsh Vardhan said a vaccine against the coronavirus disease would be ready by early next year.

0
121

கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிட்யூட் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா, 2024ஆம் ஆண்டுவரை கொரோனா வைரஸ் தடுப்பூசி போதுமான வகையில் கிடைக்காது என்று தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராசெனிகா நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்கும் ஒப்பந்தத்தை சீரம் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

ஆனால், பிரிட்டனில் வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட தன்னார்வலர்களில் ஒருவருக்கு அசாதாரணமான உடல் பக்க விளைவு தென்பட்டதால், மறுஉத்தரவு வரும்வரை அங்கு பரிசோதனை நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால், இந்தியாவிலும் சீரம் நிறுவன பரிசோதனை நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் இருந்து வெளிவரும் ஃபினான்ஷில் டைம்ஸ் என்ற நாளிதழுக்கு சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா காணொளி மூலம் பேட்டியளித்துள்ளார்.

அதில், குறைவான காலகட்டத்தில் உலக மக்கள் தொகைக்கு தேவையான வைரஸ் தடுப்பூசி மருந்தை விரைவாக உற்பத்தி செய்யும் திறனை மருந்தக நிறுவனங்கள் கொண்டிருக்கவில்லை என்று பூனாவாலா தெரிவித்துள்ளார்.

“பூமிக்கிரகத்தில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஆகலாம். கொரோனா வைரஸ் தடுப்பூசி என்பது இரண்டு முறை போடக்கூடியதாக இருக்கும். தட்டம்மை ரோட்டோவைரஸ் போல இரண்டு முறை போடக்கூடிய அந்த மருந்து தேவையென்றால், உலக அளவில் 15 பில்லியன் டோஸ்கள் மருந்து தேவை” என்று பூனாவாலா கூறியுள்ளார்.

சீரம் நிறுவனம் உலக அளவில் அஸ்ட்ராசெனிகா, நோவாவாக்ஸ் ஆகிய சர்வதேச மருந்தக தயாரிப்பாளர்களுடன் இணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, 100 கோடி டோஸ்கள் அளவிலான மருந்துகள் தயாரிக்கப்படும். அதில் பாதி அளவு இந்தியாவின் தேவைக்காக வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் ரஷ்யாவின் கமாலேயா ஆய்வகத்துடன் சேர்ந்து அந்நாடு தயாரித்துள்ளதாக கூறும் ஸ்பூட்னிக் தடுப்பு மருந்து தயாரிப்பிலும் இணைந்து செயல்படுவோம் என்று சீரம் நிறுவனம் கூறியுள்ளது.

இந்த நிலையில், லண்டனில் தற்போதுள்ள அதார் பூனாவாலா, கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பில் உலகம் சாதகமாக இருந்தாலும், தேவையான இலக்கை எட்டுவதற்கான அளவுகோலில் இன்னும் போதிய தூரத்தை கூட மருந்தக தயாரிப்பு நிறுவனங்கள் நெருங்கியதாக நான் கேள்விப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

உலக அளவில் குறிப்பாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து அடுத்த மாதம் அறிமுகமாகலாம் என்று அங்குள்ள சில நிறுவனங்களும் அரசியல் தலைவர்களும் கோரி வருகின்றனர்.

இந்த நிலையில், உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனமாக அறியப்படும் சீரம் நிறுவனத்தின் தலைமை அதிகாரியின் சமீபத்திய கருத்து, அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு தொடர்பாக வெளிவரும் கருத்துகளுடன் முரண்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

அஸ்ட்ராசெனிகா நிறுவனத்துடன் சீரம் நிறுவனம் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, 68 நாடுகளுக்கு $3 என்ற விலையில் வைரஸ் தடுப்பு மருந்தையும் நோவாவாக்ஸ் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி 92 நாடுகளுக்கு வைரஸ் தடுப்பு மருந்தையும் சீரம் நிறுவனம் வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here