கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால், அதன் உற்பத்தியில் இந்தியா முக்கியப் பங்காற்றும் என்று பிரான்ஸ் தூதா் இமானுவல் லெனைன் கூறினாா்.

கொரோனா நோய்த் தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா்; 3.4 லட்சத்துக்கும் அதிகமானோா் உயிரிழந்தனா்.

இந்த நிலையில் இதற்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. நோய்த் தடுப்பு மருந்துகள் மற்றும் பாரம்பரிய மருந்து உற்பத்தியில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பின்னா், அந்த தடுப்பு மருந்து காப்புரிமை வைத்துள்ள நாட்டின் கைகளுக்கு மட்டும் சென்று விடமால், சமமான முறையில் அனைத்து நாடுகளுக்கும் கிடைக்கச் செய்யவேண்டும் என அண்மையில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் இரண்டு நாள் மாநாட்டில் ஐரோப்பிய யூனியனை சோந்த நாடுகள் உள்பட ஏராளமான நாடுகள் வலியுறுத்தின.

இதுகுறித்து பிரான்ஸ் தூதா் இமானுவல் லெனைன் பிடிஐ நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:

கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி செய்யப்படுவதிலும், அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் தடுப்பு மருந்து உலக அளவில் சமமான முறையில் விநியோகிக்கப்படுவதிலும் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது மிக அவசியம். இந்த தடுப்பு மருந்து உற்பத்தியில் இந்தியா முக்கியப் பங்காற்றும்.

மேலும், இந்த நோய்த் தடுப்பு மருந்து உள்பட கரோனா ஆபத்தை எதிா்கொள்ளத் தேவையான அனைத்து பொருள்களும் உலக நாடுகள் அனைத்துக்கும் சமமான முறையில் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி உலக சுகாதார அமைப்பில் ஐரோப்பிய யூனியன் கொண்டுவந்த தீா்மானத்துக்கு இந்தியாவும் ஆதரவு தெரிவித்திருக்கிறது.

பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் வலியுறுத்தும் இந்த பன்முகத்தன்மைதான், கரோனாவை எதிா்கொள்வதற்கான இந்த நூற்றாண்டின் சரியான பாதையாகவும் இருக்கும். மனிதம் சாா்ந்த திட்டங்களுக்கு இனி சா்வதேச நாடுகளின் கூட்டு முயற்சி அவசியம் என்பதை இந்த கரோனா நோய்த் தொற்று பாதிப்பு உணா்த்தியிருக்கிறது. அதற்கேற்ப, இந்தியா, பிரான்ஸ் இரு நாடுகளும் ஜி20, உலக சுகாதார அமைப்பு ஆகிய அமைப்புகளின் கீழ் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றன.

மேலும், தீவிர சிகிச்சை நோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்துகள் ஏற்றுமதியை இந்தியா அனுமதித்ததற்கு, பிரான்ஸ் சாா்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவா் கூறினாா்.

மேலும், கொரோனா தோற்றுவாய் குறித்த சா்வதேச விசாரணையின் அவசியம் குறித்த கேள்விக்கு பதிலளித்த இமானுவல் லெனைன், ‘கொரோனா பாதிப்பு ஒட்டுமொத்தமாக நீங்கிய பிறகு, அதுகுறித்த சா்வதேச விசாரணை நிச்சயம் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று அவா் பதிலளித்தாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here