இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பரவத் தொடங்கியது. அதனையடுத்து, மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது முதல் தற்போதுவரை தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து வருகிறது. இந்தநிலையில், கொரோனா வைரஸ்கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.
அதில், கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளின் பயனாக பரவல் விகிதம் குறைந்துள்ளதை குறிப்பிட்டுள்ளார். இதனை கருத்தில் கொண்டு இதுவரை பின்பற்றப்பட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கைவிட தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடைசியாக பிப்ரவரி 25-ம் தேதி கொரோனா கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியானது. மார்ச் 31 வரை கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேற்கொண்டு இனி கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படாது எனவும், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை முழுமையாக மாநில அரசுகள் நீக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், எங்காவது பரவல் விகிதம் அதிகரித்தால் அதனை கண்காணித்து உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டாலும் சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி முகக்கவசம் அணிவதுடன், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.