கொடநாடு எஸ்டேட் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட சயன், மனோஜ் இருவரையும் சைதாபேட்டை நீதிபதி விடுவித்து உத்தரவிட்டுள்ளார் .

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் உள்ள பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு கும்பல் புகுந்து அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை கொலை செய்தது. மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூரை தாக்கியது. பின் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சேலம் அருகே கார் விபத்தில் இறந்தார்.

இதற்கிடையே கொடநாடு எஸ்டேட் பங்களா கொலை தொடர்பான தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் ஒரு விடியோ காட்சித் தொகுப்பை கடந்த 11-ஆம் தேதி வெளியிட்டார்.

இந்த விடியோ காட்சியில்கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற சம்பவங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர்பு இருப்பதாக அந்த விடியோவில் பேட்டியளிக்கும் சயன், மனோஜ் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் அதிமுக தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி ராஜன் சத்யா புகார் செய்தார்.

புகாரின் அடிப்படையில் சைபர் குற்றப்பிரிவு போலீஸார், மேத்யூ சாமுவேல், சயன், மனோஜ் ஆகியோர் மீது 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரையும் கைது செய்ய சென்னை தனிப்படை போலீஸார், புது டெல்லிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றனர். அங்கு சயனையும், மனோஜையும் உடனடியாக கைது செய்தனர்.

பின்னர் 3 பேரையும் போலீஸார் திங்கள்கிழமை அதிகாலை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து மத்தியக் குற்றப்பிரிவு இணை ஆணையர் டி.எஸ்.அன்பு தலைமையிலான போலீஸார் பல கட்டங்களாக 11 மணி நேரம் விசாரணை செய்தனர்.

இந்நிலையில் இந்நிலையில் திங்கள் கிழமை நள்ளிரவு சைதாபேட்டை நீதிபதி வீட்டில் சயன், மனோஜ் இருவரையும் போலீஸார் ஆஜர்படுத்தினர் . விசாரணையில் போதிய ஆதாரம் இல்லாததால் சயன், மனோஜ் இருவரையும் விடுவித்து நீதிபதி சரிதா உத்தரவிட்டார் . மேலும் இருவரையும் வரும் 18-ஆம் தேதி ரூ.10 ஆயிரம் பிணையுடன் ஆஜராக உத்தரவிட்டார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here