கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயன், மனோஜ் இருவரையும் தமிழக தனிப்படை போலீஸார் டெல்லியில் கைது செய்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அதில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். மற்றொரு முக்கியக் குற்றவாளி சயன், கேரளத்துக்கு குடும்பத்தோடு காரில் செல்லும்போது, விபத்துக்குள்ளானதில் அவரின் மனைவி விஷ்ணுபிரியா, மகள் நீத்து ஆகியோர் உயிரிழந்தனர். சயன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

இவர்களைத் தவிர்த்து, கொடநாடு எஸ்டேட்டின் சிசிடிவி பராமரிப்பாளராக கடந்த ஏழு ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்த தினேஷ் குமார் என்பவரும் மரணம் அடைந்தார். அடுத்தடுத்து நடந்த இந்த மர்ம மரணங்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது. இதற்கிடையே கொள்ளை, கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சயன் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த தீபு, சதீசன், உதயகுமார், குட்டி பிஜின், வாளையார் மனோஜ் சாமியார், வயநாட்டை சேர்ந்த மனோஜ், சந்தோஷ் சாமி, ஜம்சீர் அலி, ஜிதின் ராய் ஆகிய 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பல மாதங்களாக பேச மறுத்து வந்த சயன், தற்போது தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேலிடம் அளித்துள்ள வீடியோ வாக்குமூலத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கொடநாடு எஸ்டேட் தொடர்பான ஆவணப்படத்தை மேத்யூ வெள்ளிக்கிழமை வெளியிட, விவகாரம் பெரிதாகியது . இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த வீடியோவில் வெளியாகி உள்ள தகவல்களில் உண்மையில்லை என்றும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, மேத்யூ மீது தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆவணப்படத்தில் பேட்டியளித்த சயன், மனோஜ் ஆகியோர் மீதும் வழக்குப் பதியப்பட்டது. அ.தி.மு.க. தொழில்நுட்பப் பிரிவு மாநில இணைத் தலைவர் ராஜன் சத்யா அளித்த புகாரின்பேரில் இவ்வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கொடநாடு வழக்கு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் எஸ்.ஆர்.செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. முதல்வர் பழனிசாமி மீது அவதூறு பரப்பும் நோக்கில் விடியோ ஆதாரம் வெளியிட்டதாகக் கூறப்படும் மேத்யூ சாமுவேல், விடியோவில் பேசிய சயன், மனோஜ் ஆகியோரை கைது செய்ய தனிப்படை டெல்லி விரைந்தது. இருவரும் கைது செய்யப்பட்டதை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் உறுதி செய்துள்ளார். இருவரும் இன்று தமிழகத்துக்கு அழைத்து வரப்படவுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Courtesy :Dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here