கொடநாடு காவலாளி உட்பட 5 பேர் கொலை மற்றும் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக தான் நடத்திய புலனாய்வு குறித்த ஆவணப் படத்தை தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் வெளியிட்டுள்ளார்.

2017ல் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை செய்யப்பட்டதும், எஸ்டேட்டில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் குறித்தும் ஆவணப் படம் வெளியிடப்பட்டுள்ளது.

புது தில்லியில் இன்று தான் நடத்திய புலனாய்வை ஆவணப் படமாக வெளியிட்ட மேத்யூஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில், ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு பணமும், நகையும் இருந்தது புலனாய்வில் தெரிய வந்துள்ளதாக மேத்யூஸ் கூறினார்.

மேலும், அவர் வெளியிட்ட ஆவணப் படத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போல்லோவில் இருந்த போது கொடநாட்டில் இருந்த சில ஆவணங்களை எடுத்துவருமாறு ஓட்டுநர் கனகராஜ் என்னிடம் கூறினார். ஆவணங்களை முதல்வரிடம் தர வேண்டும் என்று கூறியதாகவும் கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றி வந்த சயான் கூறியுள்ளார்.

கொடநாட்டில் நடந்த கொள்ளையின் போது கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த ஆவணப் படத்தில் பேட்டியளித்துள்ளனர்.

கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான விவரம்

கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக பணியாற்றி வந்த ஓம் பகதூர் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் அரிவாளால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோத்தகிரி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் முதல் குற்றவாளியான கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடைபெற்ற விபத்தில் சிக்கி ஏப்ரல் 28-ஆம் தேதி உயிரிழந்தார். இவரது கூட்டாளி சயன், தனது மனைவி வினுபிரியா, மகள் நீது ஆகியோருடன் ஏப்ரல் 29-ஆம் தேதி கேரளத்துக்கு காரில் சென்றபோது, பாலக்காடு அருகே விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இந்த விபத்தில் வினுபிரியா, நீது ஆகியோர் உயிரிழந்தனர்.

காயமடைந்த சயன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையே, கொடநாடு கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக கூலிப்படையைச் சேர்ந்த சந்தோஷ், தீபு, சதீஷன், உதயகுமார், ஜிதின் ராய், ஜம்ஷே அலி, மனோஜ், ஜிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொடநாடு சதித் திட்டத்தில் சயனுக்கு பெரும் பங்கு இருப்பதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த தகவல்களுக்கு முரணாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் வெளியிட்டிருக்கும் ஆவணப் படத்தில் பல தகவல்கள் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

https://twitter.com/Hariindic/status/1083690068194152449

Courtesy : Dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here