கொஞ்சம் தமிழிலும் பேசலாம் – டாப்சி

0
1638

தன்னை இந்தி மொழியில் பேச வலியுறுத்திய நபரிடம் நடிகை டாப்சி எழுப்பிய கேள்வி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவின் நேற்றைய (சனிக்கிழமை) அமர்வு ஒன்றில் நடிகை டாப்சி பன்னு கலந்து கொண்டு பலரது கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதிலளித்து கொண்டிருந்தார்.

அப்போது, நடுவில் குறுக்கிட்ட நபரொருவர், டாப்சியிடம் இந்தி மொழியில் பேசும்படி வலியுறுத்தினார். உடனே, பார்வையாளர்களை நோக்கிய டாப்சி, “இங்கு இருப்பவர்கள் அனைவருக்கும் இந்தி தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு பெரும்பாலானோர் இல்லை என்று பதிலளித்தனர்.

இருப்பினும், அந்த நபர் தொடர்ந்து, ‘நீங்கள் ஒரு பாலிவுட் நடிகை. எனவே இந்தியில்தான் பேச வேண்டும்’ என்று தெரிவித்தார். இதையடுத்து, அந்த நபரின் பேச்சுக்கு முற்று வைக்கும் வகையில், “நான் தமிழ், தெலுங்கு திரைத்துறையிலும் நடித்து வருகிறேன். எனவே, நான் உங்களிடம் தமிழில் உரையாடலாமா?” என்று டாப்சி கேட்டவுடன், அங்கு கூடியிருந்த பார்வையாளர்கள் ஆர்ப்பரிக்க, கேள்வி எழுப்பிய நபர் அமைதியாக உட்கார்ந்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகளை விடுத்து நடிப்புத்திறன் சார்ந்த கேள்விகளை கேட்குமாறும் டாப்சி பார்வையாளர்களிடம் வலியுறுத்தினார்.

குறிப்பாக, பெண்களை மையமாக கொண்ட திரைப்படங்களை பார்ப்பதன் அவசியம் குறித்து அவர் தனது கருத்தை பதிவு செய்ததாக ஐஎஃப்எஃப்ஐ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “நீங்கள் ஒரு நல்ல ரசிகராக இருக்க விரும்பினால், பெண்ணை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட படத்தை திரையரங்கிற்கு சென்று பாருங்கள். ஏனென்றால், பெண்ணை மையாக கொண்ட ஒரு திரைப்படம் வெற்றிபெற்றால் அது அதேபோன்ற குறைந்தது ஐந்து திரைப்படங்களை தயாரிப்பதற்கு காரணமாக அமையும்” என்று அந்த ட்விட்டர் பதிவில் டாப்சி கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here