சிறுமியின் செயலைக் கேள்விப்பட்ட ஹீரோ சைக்கிள்ஸ், அனுப்ரியாவுக்குப் புத்தம் புதிய சைக்கிளை வழங்கத் தயார் என்று ட்விட்டரில் அறிவித்துள்ளது

சைக்கிள் வாங்குவதற்காக நான்காண்டுகளாகத் தான் சேமித்து வைத்திருந்த 9,000 ரூபாய் பணத்தை, கேரள வெள்ள நிவாரணத்துக்காக வழங்கிய விழுப்புரத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி அனுப்ரியாவின் செயல் பலரையும் நெகிழச் செய்துள்ளது. சிறுமியின் இச்செயலைக் கேள்விப்பட்ட முன்னணி சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ சைக்கிள்ஸ், அனுப்ரியாவுக்குப் புத்தம் புதிய சைக்கிளை வழங்கத் தயார் என்று ட்விட்டரில் அறிவித்துள்ளது.


“எனக்கு ஒரு சைக்கிள் வாங்கவேண்டும் என்பதற்காக கடந்த நான்கு ஆண்டுகளாக நான் 9,000 ரூபாய் வரை சேமித்திருந்தேன். தற்போது டிவியில் கேரளாவில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படும் காட்சிகளைப் பார்த்த பின்பு, எனது நான்கு வருட சேமிப்பை அம்மக்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளேன்” என்று சிறுமி அனுப்ரியா கூறியிருந்தார். சிறுமியின் இந்த உயர்ந்த எண்ணத்தையும் அவரது நல்ல மனதையும் போற்றும் வகையில் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் அவருக்கு ஒரு புத்தம்புதிய சைக்கிளை வழங்கவுள்ளதாக ட்விட்டரில் அறிவித்துள்ளது. ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் தலைவர் பங்கஜ் முஞ்சால் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில், “அனுப்ரியா! உன்னை வணங்குகிறேன், நீ ஒரு நல்ல உள்ளம் படைத்தவள். மேலும் நன்மையைப் பரப்புவாயாக. உனக்கு உன் வாழ்வின் ஒவ்வோர் ஆண்டும் ஒரு புதிய சைக்கிள் வழங்குவதில் ஹீரோ மகிழ்ச்சியடைகிறது. முகவரியை எம்மோடு பகிர்ந்துகொள்க. உனக்கு எனது அன்பும் வாழ்த்துகளும். கேரளாவுக்காகப் பிரார்த்திக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார். கேரள எம்.பி சசி தரூர் ஹீரோ நிறுவனத்தின் இச்செயலைப் பாராட்டியுள்ளார். “ தனது சேமிப்பு மொத்தத்தையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக வழங்கிய ஒன்பது வயது சிறுமிக்கு சைக்கிளை அளித்த ஹீரோ நிறுவனத்துக்கு நன்றி” என்று சசி தரூர் ட்வீட் செய்துள்ளார்.

courtesy:ndtv

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here