ராக்கெட் தொழில்நுட்பம் தொடர்பான ரகசியங்களை விற்பனை செய்ததாகவும், உளவு பார்த்ததாகவும், கடந்த 1994-ம் ஆண்டு விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது கேரள காவல்துறை அதிகாரிகள் தவறான முறையில் திட்டமிட்டு வழக்கு பதிவு செய்தது உறுதியானதால் அவருக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

திரவ எரிபொருள் பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் திட்டத்தை வடிவமைத்த முக்கியமான விஞ்ஞானி நம்பி நாராயணன். நம்பி நாராயணன், மாலத்தீவு உளவுப் பிரிவைச் சேர்ந்த மரியம் ரஷீதா, பவுஸியா ஹுசேன் ஆகியோர் மூலமாக ரஷ்யா மற்றும் பாகிஸ்தானுக்கு இந்த ரகசியங்களை விற்பனை செய்ததாக, 1994 நவம்பர் 30-ம் தேதி, கேரளா போலீஸாரால் அவர் கைது செய்யப்பட்டார். அவரை கேரள காவல்துறை அதிகாரிகள் கொடூரமாக நடத்தியாக கூறப்படுகிறது. சிபிஐ நடத்திய விசாரணையில், இந்த வழக்குக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்பது தெரியவந்ததால் அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

நம்பி நாராயணன் நிரபராதி என சிபிஐ விசாரணையில் உறுதியான நிலையில், தன் மீது பொய் வழக்குப் போட்டதற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் நம்பி நாராயணன் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

ஆனால் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படவில்லை. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு இன்று அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
‘‘விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது வேண்டுமென்றே வழக்கு தொடர்ந்து அவரை அவமானப்படுத்தி, மன அழுத்தத்துக்கு ஆளாக்கியது உறுதியாகியுள்ளது. சில காவல்துறை அதிகாரிகள் இதில் முனைப்புடன் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. வழக்கில் தொடர்பு இல்லை என்பது உறுதி செய்ப்பட்டு விட்டாலும் அவர் சந்தித்த அவமானமும், மன அழுத்தமும் மிக அதிகமானது.

எனவே, நம்பி நாராயணனுக்கு கேரள அரசு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், தவறான வழக்கைப் பதிவு செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து தவறான வழக்குப் பதிவு செய்த காவல்துறை மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவெடுக்குமாறு உத்தரவிட்டு, வழக்கு முடித்துவைக்க்பபட்டது.

ஓய்வு பெற்ற நீதிபதி டி.கே ஜெயின் தலைமையிலான கமிட்டி, நம்பி நாராயணன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தும். இந்த கமிட்டியில் மத்திய அரசு மற்றும் கேரள அரசு சார்பில் தலா ஒருவர் இடம் பெறுவர்’’ என கூறினர்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்