கேரள காவல்துறை சார்பில் ‘இ வித்தியாரம்பம்’ திட்டம் தொடக்கம்

0
162

கேரள காவல்துறை சார்பில் ‘இ வித்தியாரம்பம்’ என்ற பெயரில் ஒரு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி வசதி இல்லாத மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன், டிவி, இண்டர்நெட் உட்பட வசதி ஏற்படுத்திக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராய் விஜயன் திருவனந்தபுரத்தில் வியாழக்கிழமை நிருபர்களிடம் கூறியது:

”கேரளாவில் (ஜூன்-11)  வியாழன் இன்று 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 37 பேர் வெளி மாநிலங்களிலிருந்தும், 27 பேர் வெளி நாடுகளிலிருந்தும் வந்தவர்கள் ஆவர். கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் இன்று 14 பேருக்கு நோய் பரவியுள்ளது. இவர்களில் 4 பேர் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஆவர். 5 சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் , 4 சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கும் இன்று நோய் பரவியுள்ளது.

இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 20 பேர் மகராஷ்டிர மாநிலத்தில் இருந்தும், 7 பேர் டெல்லியில் இருந்தும், தலா 4 பேர் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்தும், தலா ஒருவர் மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 25 பேர் திருச்சூர் மாவட்டத்தையும்,13 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், தலா 10 பேர் காசர்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களையும், 8 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 7 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 5 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், தலா 2 பேர் எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களையும், ஒருவர் கோழிக்கோடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இன்று 62 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இவர்களில் 16 பேர் திருவனந்தபுரம் மாவட்டத்தையும் , 13 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 8 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 7 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 6 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், 5 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 3 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், தலா 2 பேர் மலப்புரம் மற்றும் கொல்லம் ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இன்று கண்ணூர் மாவட்டம் இரிட்டி பகுதியைச் சேர்ந்த முகமது என்பவர் கரோனா பாதித்து மரணமடைந்துள்ளார். இன்று 5,044 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை கேரளாவில் 2,244 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது 1,258 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது 2,18,949 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,922 பேர் பல்வேறு மருத்துவமனையில் உள்ளனர்.

இன்று கரோனா அறிகுறிகளுடன் 231 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,03,757 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் 2,873 பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. இதுதவிர சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 27,118 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 25,757 பேருக்கு நோய் இல்லை எனத் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் உடனடியாகக் குறைய வாய்ப்பில்லை என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். நோயின் தீவிரம் எப்போது குறையும் எனக் கூற முடியாது .

கேரளாவில் தற்போது 133 நோய்த் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன. தற்போது தனிமைப்படுத்தலுக்கு புதிய நிபந்தனைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் வருபவர்கள் அவர்களின் வீடுகள் அல்லது அவர்களுக்கு விருப்பப்பட்ட இடங்களில் தனிமையில் இருக்கலாம். இது தொடர்பாக அவர்கள் அதிகாரிகளிடம் சுயவாக்குமூலம் அளிக்க வேண்டும். வீடுகளில் வசதி உள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். வசதி இல்லாவிட்டால் கண்டிப்பாக அரசு முகாம் அல்லது பணம் செலுத்தி ஓட்டல்களில் தங்கிக் கொள்ளலாம். தனிமை முகாம்களில் இருப்பவர்கள் நிபந்தனைகளை மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமுடக்கம் காரணமாக பல்வேறு துறைகளில் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையும் கடும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இந்த துறையில் கேரளாவில் மட்டும் 26,000 பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தகவல் தொழில்நுட்பத் துறைக்கு உதவ அரசு புதிய திட்டங்களைத் தயாரித்து வருகிறது.

கேரளாவில் தற்போது பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. போதிய வசதி இல்லாத பல ஏழைக் குழந்தைகள் இதில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதுபோன்ற குழந்தைகளுக்கு உதவுவதற்காக கேரள காவல்துறை சார்பில் ‘இ வித்தியாரம்பம்’ என்ற பெயரில் ஒரு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி வசதி இல்லாத மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன், டிவி, இண்டர்நெட் உட்பட வசதி ஏற்படுத்திக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது”.

இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here