கேரள அடை பாயாசம்!

0
2670

கேரளாவில் ஓணம் பண்டிகை அன்று விருந்தில் பரிமாறப்படும் பாயசங்களில் இந்த அடை பாயாசத்திற்கு தனி இடமுண்டு. இந்த பாயாசம் இல்லாமல் ஓணம் பண்டிகை முழுமை அடையாது. சமீபத்தில் வந்த ஓணம் பண்டிகை அன்று எங்கள் வீட்டிலும் இந்த பாயசம் செய்து பரிமாறினேன். எல்லோரும் விரும்பி உண்டார்கள். இருபது வருடங்களுக்கு முன்பு அடை வீட்டிலே செய்வார்கள். இப்பொழுது யாருக்கும் பொறுமையும் நேரமும் இல்லை. நான் கடையில் வாங்கித்தான் பாயாசம் செய்தேன். எல்லாக் கடைகளிலும் அரிசியில் செய்த இந்த அடை கிடைக்கும்.

தேங்காய்ப் பாலில் இந்தப் பாயாசம் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். புதிதாக தேங்காய்ப் பாலில் பாயாசம் செய்பவர்கள் கவனமாகச் செய்ய வேண்டும்; இல்லையென்றால் பால் திரிந்துவிடும். வரும் மாதங்களில் நிறைய பண்டிகை வர உள்ளது. கண்டிப்பாக இதைச் செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

அரிசி அடை – 50 கிராம்
துருவிய வெல்லம் – 125 கிராம்
முதலில் பிழிந்த தேங்காய்ப் பால் – அரை கிண்ணம்
இரண்டாவது பிழிந்த தேங்காய்ப் பால் – இரண்டரை கிண்ணம்
நெய் – ஒரு தேக்கரண்டி
ஏலக்காய்த் தூள் – கால் தேக்கரண்டி
சுக்குத் தூள் – கால் தேக்கரண்டி
சிறிதாக அரிந்த தேங்காய்த் துண்டுகள் – ஒரு தேக்கரண்டி
முந்திரி பருப்பு – 10
திராட்சைப் பழம் – 10

செய்முறை:

முதலில் வெல்லத்தில் அரை கிண்ணம் நீர் ஊற்றி உருக விட்டு அரித்துக் கொள்ளவும். அரிசி அடையை இரண்டாவது தேங்காய் பாலில் வேக விடவும். சிறு தீயில் பத்து நிமிடம் வேக விடவேண்டும். அதன் பின் உருக்கிய வெல்லத்தை சேர்த்து அடை குறுகி வரும் வரை கிளறவும். அதன்பின் ஏலக்காய்த் தூள், சுக்குத் தூள் போடவும். நெய்யில் தேங்காய்த் துண்டுகளைக் கருகாமல் வறுத்துக் கொள்ளவும். முந்திரி பருப்பு, திராட்சைப் பழம் இவற்றையும் வறுத்துக் கொள்ளவும். முதலில் பிழிந்த தேங்காய்ப் பாலை அடையில் ஊற்றி ஒரு கிளறு கிளறியவுடன் இறக்கிவிடவும் இல்லை என்றால் திரிந்து விடும். அதனுடன் வறுத்த தேங்காய்த் துண்டுகள், முந்திரி, திராட்சை போடவும். அடை பாயாசம் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here