கேரளாவில் மழை, வெள்ளம் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டு உள்ளது.

கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இதுவரை இல்லாத அளவுக்கு கனமழையாக பெய்து வருகிறது. கடந்த 8-ந்தேதி முதல் தீவிரம் அடைந்த இந்த மழை கேரளாவையே புரட்டிப்போட்டு வருகிறது.

இந்த மழை காரணமாக கேரள மாநிலம் முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதேசமயம் வடக்கு பகுதி மாவட்டங்களான மலப்புரம், வயநாடு ஆகிய இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது. மழை வெள்ளம் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று மட்டும் கவளப்பாறை பகுதியில் 4 பேரின் பிணங்கள் மீட்கப்பட்டு உள்ளது.

வயநாடு புத்துமலையில் மண்ணில் புதையுண்ட 7 பேரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த பகுதியில் மேலும் 40 பேர் மாயமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாநிலம் முழுவதும் இன்றும் கனமழை பெய்து வருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மழை நீடிப்பதால் மீட்புப்பணியும் பாதிக்கப்பட்டு உள்ளது.

மழை காரணமாக 1057 வீடுகள் முழுவதுமாக இடிந்து விட்டது. 11 ஆயிரத்து 159 வீடுகள் பகுதியாக சேதம் அடைந்து உள்ளது.

கோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டு உள்ளது. அதேப் போல கண்ணூர், வயநாடு, பாலக்காடு, திருச்சூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்து வருகிறது. மழை குறைந்து உள்ள மாவட்டங்களில் மீட்புப்பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.

பல இடங்களில் மீட்புப் பணிக்கு செல்லமுடியாத படி சாலைகளில் மண், பாறைகள் சரிந்து விழுந்து உள்ளது. பெரிய, பெரிய மரங்களும் வேரோடு சாய்ந்து உள்ளது. இதனால் மீட்புப் படையினர் பெரும் சிரமத்திற்கு இடையேதான் மீட்புப்பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட மலப்புரம் மாவட்டம் கவளப்பாறை, வயநாடு மாவட்டம் புத்துமலை ஆகிய இடங்களில் தொடர்ந்து மணலை அகற்றி மீட்புப்பணி நடந்து வருகிறது.

கோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம், வயநாடு, மலப்புரம், கண்ணூர், கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி ஆகிய 9 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

மாநிலம் முழுவதும் 1206 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளது. இந்த முகாம்களில் 2 லட்சத்து 21 ஆயிரம் பேர் தஞ்சமடைந்து உள்ளனர்.

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார். வட கேரளம் பகுதிகளில் ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்புகளை அவர் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். மேலும் மலப்புரம் பகுதியில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ள மக்களை சந்தித்தும் அவர் ஆறுதல் கூறினார். அப்போது கேரள அரசு உங்களோடு இருக்கும். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதி கூறினார்.

கேரள வெள்ள நிவாரணத்திற்கு மத்திய அரசும் நிதிஉதவி செய்து உள்ளது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த மத்திய மந்திரி முரளிதரன் கூறும்போது, கேரளாவுக்கு முதல்கட்டமாக ரூ.52 கோடி நிதிஉதவி வழங்கப்படும். மேலும் ரூ.4 கோடி மதிப்பு உள்ள மருந்துகளும் அனுப்பிவைக்கப்படும் என்றார். மேலும் மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளையும் அவர் பார்வையிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here