கேரள மாநிலத்தில் பேராயர் பிரான்கோ முல்லகல்-லுக்கு எதிராக கன்னியாஸ்திரி தெரிவித்த பாலியல் வன்கொடுமை புகாரைத் தொடர்ந்து, பேராயர் பதவியில் இருந்து அவர் விலகியுள்ளார்.

தனக்கு நீதி கேட்டும், சம்பந்தப்பட்ட பேராயரை பதவி நீக்கம் செய்யக் கோரியும் இந்தியாவுக்கான வாடிகன் தூதர் கியாம்பெடிஸ்டா டிக்வட்ரோவுக்கு கன்னியாஸ்திரி கடிதம் எழுதியிருந்தார்.

அதில், அரசியல், பணபலத்தின் மூலம் தனக்கு நீதி கிடைக்கவிடாமல் தடுப்பதாக பேராயர் மீது குற்றம்சாட்டியுள்ளார். இக்கடிதத்தின் நகல் இந்திய கத்தோலிக்க பேராயர்களின் கூட்டமைப்பின் (சிபிசிஐ) தலைவர் கார்டினல் ஆஸ்வால்டு கிரேஷியஸ் மற்றும் டெல்லி மெட்ரோபாலிட்டன் பேராயர் அனில் கெளட்டோ உள்பட 21 பேருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், பேராயர் பதவியை ராஜினாமா செய்வதாக பிரான்கோ முல்லகல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பேராயர் பிரான்கோ முல்லகல் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், எனக்கு எதிராக சதி நடக்கிறது. தேவாலயத்திற்கு எதிரானவர்கள் தான் என் மீது இது போன்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். முன்பு ஒருமுறை அந்த கன்னியாஸ்திரியின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்து அவரை கண்டித்தேன். அதன் காரணமாகவே என் மீது புகார் கூறி வருகிறார். எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாததால் காவல்துறையினர் என்னை இதுவரை கைது செய்யவில்லை’ என்றார்.

சம்பவத்தின் பின்னணி: ஜலந்தர் கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் பிரான்கோ முல்லகல், கடந்த 2014 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் பலமுறை தம்மை பாலியல் வன்கொடுமை செய்ததாக கன்னியாஸ்திரி ஒருவர் குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக காவல்துறை முறையான விசாரணை நடத்த மறுப்பதாகக் கூறி பல கன்னியாஸ்திரிகள் இணைந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் 3 பேர் மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்கு கடந்த 10-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு பாதுகாப்பு அளிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து பதில் அளிக்குமாறு கேரள அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதே சமயம், விசாரணைக்காக பேராயர், வரும் 19-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என காவல்துறை சம்மன் அனுப்பியது.

இந்நிலையில், கேரள உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய், நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார் ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.

அப்போது, பேராயருக்கு எதிரான புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் ஒருவர் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு நீதிபதிகள் பதில் அளிக்கையில், அவசர கதியில் விசாரணை நடத்துவது என்பது, குற்றம்சாட்டப்பட்டுள்ளவர் தண்டனையின்றி தப்புவதற்கு வழிவகுப்பதாக அமைந்துவிடும் என்று தெரிவித்தனர்.

இந்த வழக்கில் காவல்துறை இதுவரை நடத்திய விசாரணை திருப்திகரமாக உள்ளது. வழக்கு விசாரணை தொடர்பாக, சம்பந்தப்பட்ட கன்னியாஸ்திரி அமைதி காத்ததைப் போல, இந்த மூன்று மனுதாரர்களும் அமைதி காக்க வேண்டும் என்றும், பேராயரிடம் காவல்துறை விசாரணைக் குழு, வரும் 19-ஆம் தேதி விசாரணை நடத்திய பின்னர், இந்த மனுக்கள் குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை, வரும் 24-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Courtesy : dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here