கேரளாவில் மக்கள் தொகை பதிவேட்டை அமல்படுத்தமாட்டோம் : பினராயி விஜயன்

0
129

மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு நாட்டின் பல பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், கேரளாவில் மாநில அரசே இந்த சட்டத்தை எதிர்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதுடன் உச்ச நீதிமன்றத்திலும் மாநில அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாநில அரசு தன்னிடம் தகவல் தெரிவிக்காமல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தவறு என்று கேரள கவர்னர் ஆரீப் முகம்மது கான் கூறினார். மேலும் இது தொடர்பாக கேரள அரசிடம் அவர் விளக்கமும் கேட்டுள்ளார்.

இந்நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணியை வருகிற ஏப்ரல் மாதம் முதல் நாடு முழுவதும் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. செப்டம்பர் மாதத்திற்குள் இந்த பணியை முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி என்பது தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணிக்கான முன்னோடி நடவடிக்கையாக உள்ளதாக கூறி இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இதனைத் தொடர்ந்து மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கும் பணியை கேரளாவில் அமல்படுத்த மாட்டோம் என்று கேரள அரசும் அறிவித்து விட்டது. இந்த நிலையில் கேரள அமைச்சரவையின் சிறப்பு கூட்டம் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், கேரளாவில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணியை மேற்கொள்வது இல்லை என்று முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் நடவடிக்கைகள் மூலம் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்புக்கு வழி ஏற்படும் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இந்த பணியை மேற்கொண்டால் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. எனவே தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணியை கேரளாவில் அமல்படுத்தமாட்டோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here