கேரளாவில் பெய்துவரும் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுக்கு இதுவரை 22 பேர் இறந்துள்ளனர் . மாநிலத்தில் 22 அணைகள் நிரம்பித் திறக்கப்பட்டுள்ளன. இதனால், பெரும்பாலான மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது.

கேரள மாநிலம் முழுவதும் பெய்து வரும் கடும் மழையினால் பாலக்காடு, வயநாடு, கோழிக்கோடு பகுதிகளில் பலரைக் காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக மத்திய படைகளின் உதவியை மாநில அரசு கோரியுள்ளது.

ஆசியாவில் மிகப்பெரிய வளைவு அணையான இடுக்கி அணை தனது முழுக்கொள்ளளவை எட்டும்தருவாயில் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணை திறக்கப்பட்டுள்ளது. கடந்த 26 ஆண்டுகளில் முதல் முறையாக செருதோனி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இடுக்கி அணையின் நீர்மட்டம் 2,403 அடியாகும், இப்போது, அணையில் 2,399 அடி நீர் இருப்பதால், அணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இடுக்கி அணையில் நீர் திறந்துவிடப்பட்டிருப்பதால் கொச்சி விமான நிலைய ஓடுபாதையில் நீர் தேங்கும் என்ற அச்சம் ஏற்பட்டது. இதன் காரணமாக அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்களின் தரையிறக்கம் இரண்டு மணி நேரத்துக்கு தற்காலிமாக நிறுத்திவைக்கப்பட்டது. மூன்று மணியிலிருந்து தரையிறக்கம் மீண்டும் வழக்கம்போல் அனுமதிக்கப்படுகிறது. கொச்சியில் இருந்து புறப்படும் விமானங்களைப் பொறுத்தமட்டில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

கேரளத்தில், வரலாறு காணாத வகையில் நீர்மட்டம் உயர்ந்ததால் கடந்த மூன்று வாரங்களில் 22 அணைகள் திறந்துவிடப்பட்டன.

கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது –

மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால், ஆறுகளில் வெள்ளம் ஆபத்தான கட்டத்தை தாண்டிச் செல்கிறது. வரலாற்றில் முதல்முறையாக 22 அணைகள் நிரம்பும் தருவாயில் திறக்கப்பட்டுள்ளன.

இதனால், குட்டநாடு ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆதலால், வரும் 11-ஆம் தேதி நடக்க இருந்த நேருக்கோப்பைக்கான படகுப்போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.

மாநிலத்தில் மீட்புப்பணிக்காக ராணுவம், கடற்படை, கடலோர பாதுகாப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் மீட்புப்பணியில் ஈடுபட கோரப்பட்டுள்ளது.

மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், மிகப்பெரிய அளவுக்குச்சேதம் ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்களை மீட்கக் கடற்படை ஹெலிகாப்டர் உதவிக் கோரப்பட்டுள்ளது.

இதில் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, இடுக்கி மாவட்டங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அனைத்து மாவட்டங்களிலும் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. வெள்ளச் சேதங்கள் குறித்து விரைவில் மத்திய அரசிடம் தெரிவிப்போம் என்று கூறினார்.

Courtesy :NDTV

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்