கேரளாவில் அதிக ரசிகர்களை கொண்ட தமிழ் நடிகர் விஜய். படத்துக்குப் படம் கேரள உரிமைக்கான தொகை அதிகரித்துக் கொண்டே போகிறது. சுமார் 10 கோடிகள் கொடுத்து சர்காரின் கேரள திரையரங்கு உரிமையை IFAF இன்டர்நேஷனல் நிறுவனம் வாங்கியுள்ளது.

விஜய் படங்கள் வெளியாகும் தேதிகளில் மலையாளத்தின் சின்ன நடிகர்களின் படங்கள் வெளியாவதில்லை. விஜய் படத்துக்கு முன்னால் நமது படங்களின் வசூல் அமுங்கிவிடும் என்ற பயம். அதற்கேற்ப சர்காரை சுமார் 300 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இது புதிய மைல்கல்.

சர்கார் வெளியீட்டு திட்டங்கள் ஏற்கனவே திரையரங்குகளால் வரையறுக்கப்பட்டு விட்டன. அதிகாலை 5 மணிக்கு சர்காரை திரையிட 100 திரையரங்குகளாவது தயாராக உள்ளன. திரிச்சூர் தலிக்குளத்தில் அமைந்திருக்கும் கார்த்திகா திரையரங்கு, காலை 5 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.45 வரை மொத்தம் 8 காட்சிகளை திரையிடயிருப்பதாக அறிவித்துள்ளது. இதுபோன்ற மாரத்தான் திரையிடல் சமீபத்தில் நிவின் பாலி, மோகன்லால் நடித்திருந்த காயங்குளம் கொச்சுண்ணிக்கு நடத்தப்பட்டது. இப்போது சர்காருக்கு.

வியாபாரம், எதிர்பார்ப்பு, திரையிடல் என அனைத்தும் சுமூகமாக போய்க் கொண்டிருக்கையில் மோகன்லாலின் ட்ராமா வடிவில் சிக்கல் எழுந்துள்ளது. ரஞ்சித் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருக்கும் புதிய படத்தின் பெயர் ட்ராமா. தனது முந்தையப் படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இந்தப் படத்தை ரஞ்சித் எடுத்திருக்கிறார். மோகன்லாலுடன் ஆஷா சரத், ஷியாமபிரசாத், அருந்ததி நாக், தில்லீஷ் போத்தன் உள்பட பலர் நடித்துள்ளனர். இங்கிலாந்த், கேரளா, துபாய் என பல இடங்களில் உருவான இந்தப் படத்தை நவம்பர் 1 வெளியிடுகின்றனர். சர்கார் செவ்வாய் வெளியாகிறது என்றால் அதற்கு முந்தைய வாரம் வியாழக்கிழமை.

மோகன்லால் படம் வெளியாவதால் திட்டமிட்டபடி 300 திரையரங்குகள் சர்காருக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ட்ராமா ரசிகர்களை கவர்ந்தால் நவம்பர் 6 வெளியாகும் சர்காருக்கு சின்ன சறுக்கல் நேர வாய்ப்புள்ளது. அதேநேரம், ட்ராமா சறுக்கினால் நவம்பர் 6 ட்ராமைவை தூக்கிவிட்டு சர்காரை திரையிடவும் வாய்ப்புள்ளது. இதில் எது நடக்கப் போகிறது என்பதை அறிய மலையாளிகள் ஆவலாக உள்ளனர்.

விஜய்யிடம் மோகன்லால் படம் தோற்கப் போகிறதா? இல்லை சர்காரை வீழ்த்தி மண்ணின் மைந்தர் மோகன்லால் வெற்றிபெறப் போகிறாரா?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்