கேரள மாநிலத்தில் கனமழையால் 5 சிறு அணைகள் நிரம்பியதையடுத்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து, பரவலாக மழை பெய்து வருகிறது. ஜூலை 17ம் தேதி முதல் 4 நாட்களுக்கு அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி மாநிலத்தின் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்றும் மழை நீடிக்கிறது.  மழை தொடர்பான விபத்துக்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 

கோழிக்கோடு மாவட்டத்தில் பலத்த சூறைக்காற்றுடன் இன்று அதிகாலை பலத்த மழை பெய்தது. கோழிக்கோடு- கோயிலாண்டி சாலையில் ஒரு பெரிய மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்தை துண்டுதுண்டாக வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். 

மழை நீடிப்பதால் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதற்கிடையே கேரளா, கர்நாடகா மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்கள், அந்தமான், நிகோபார் மற்றும் லட்சத் தீவுகளில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால்  மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே மழையால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. 5 அணைகளில் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டியதையடுத்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here