பயிற்சியாளர் தேர்வில் கேப்டன் விராத் கோலியின் கருத்துக்கு மதிப்பளிக்கப்படும் என்று முன்னாள் வீரரும் இந்தியக் கேப்டனுமான கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது  ரவிசாஸ்திரி உள்ளார். இதேபோல பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கர், பந்து வீச்சுக்கு பரத் அருண், பீல்டிங்குக்கு ஸ்ரீதர் ஆகியோர் பயிற்சியாளராக உள்ளனர். மேற்கிந்தியத் தீவுகளுடனான தொடருடன் இவர்களது பதவிக் காலம் முடிவடைகிறது.

இதையொட்டி பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது.

இந்நிலையில், இந்த மாதம் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் பயிற்சியாளர் தேர்வு நடக்கிறது. பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில்தேவ் தலைமையில் அன்ஷூமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோரை கொண்ட ஆலோசனை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. 

இந்திய அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நீடிக்க வேண்டும் என்று கேப்டன் விராத் கோலி விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான கெய்க்வாட் கூறும்போது, ‘விராத் கோலியின் கருத்தை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை. அது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம்தான் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி கபில்தேவ் கூறும்போது, ‘’ பயிற்சியாளர் தேர்வில் கேப்டன் விராத் கோலி உள்பட ஒவ்வொருவரின் கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார். 

கமிட்டி உறுப்பினர்களில் மற்றொருவரான சாந்தா ரங்கசாமி, ‘பயிற்சியாளர் தேர்வு குறித்து கருத்து சொல்ல விராத் கோலிக்கு உரிமை இருக்கிறது. பயிற்சியாளரை நாங்கள் 3 பேரும் கூட்டாக விவாதித்து முடிவு செய்வோம்’ என்றார்.

தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீண்டும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவருடன் 6 பேர் பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்க முன்னாள் தொடக்க வீரர் கேரி கிர்ஸ்டன், ஐ.பி.எல்.லில் ஐதராபாத் அணியின் பயிற்சியாளராக இருக்கும் டாம் மூடி, நியூசிலாந்து முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெஸ்சன், இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்தனே, இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ராபின் சிங், லால்சந்த் ராஜ்பூட் ஆகியோர் பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் அளித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.