இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான கெளதம் அதானி இன்று 60-வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவரது குடும்பத்தினர் ரூ.60 ஆயிரம் கோடி நன்கொடை அளிக்க முடிவு செய்து உள்ளனர். அதானி பெயரில் அறக்கட்டளை தொடங்கி இந்த நிதியானது கல்வி, சுகாதாரம், மருத்துவம் போன்ற சேவைகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முன்னணி தொழிலதிபரான கௌதம் அதானி துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். கௌதம் அதானி சொத்து மதிப்பு சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அதானி சென்டிபில்லியனர்ஸ் கிளப்பில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு என்பது மூன்று இலக்கங்களில் சொத்து மதிப்பு கொண்ட உலகப் பணக்காரர்களின் குழுவாகும். இதன் மூலம் உலகின் டாப் 10 பணக்காரர்களில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளார் அதானி.

இந்தநிலையில் கெளதம் அதானி இன்று 60-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது குடும்பத்தினர் ரூ.60 ஆயிரம் கோடி நன்கொடை அளிக்க முடிவு செய்துள்ளனர். சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறைகளுக்கு இந்த நன்கொடை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதானி அறக்கட்டளை சார்பில் இந்த பணிகள் நிர்வகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘கெளதம் அதானியின் தந்தை சாந்திலால் அதானியின் பிறந்தநாள் நூற்றாண்டு மற்றும் கெளதம் அதானியின் 60-வது பிறந்தநாளையொட்டி பல்வேறு சமூக நலன்களுக்காக அதானி குடும்பம் ரூ.60,000 கோடி நன்கொடை அளிக்க உறுதிபூண்டுள்ளது.

இந்தியாவின் மக்கள்தொகை நன்மையின் திறனைப் பயன்படுத்த, சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் அதிகரித்து வருகிறது. இந்தப் பகுதிகள் ஒவ்வொன்றிலும் உள்ள குறைபாடுகள், ஆத்மநிர்பர் பாரத்’ திட்டத்திற்குத் தடையாக உள்ளன.

அதானி அறக்கட்டளை இந்தப் பகுதிகள் அனைத்திலும் ஒருங்கிணைந்த வளர்ச்சி முயற்சிகளில் கவனம் செலுத்தும் சமூகங்களுடன் இணைந்து பணியாற்றுவதில் சிறந்த அனுபவத்தைப் பெற்றுள்ளது. இந்த சவால்களை எதிர்கொள்வதன் மூலம் நமது எதிர்கால பணியாளர்களின் திறன் மற்றும் போட்டித்தன்மையை கணிசமாக மேம்படுத்த முடியும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கெளதம் அதானி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
‘‘எனது ஊக்கமளிக்கும் தந்தையின் 100 வது பிறந்தநாள் தவிர, இந்த ஆண்டு எனது 60 வது பிறந்தநாளும் ஆகும். இதையொட்டி நமது நாட்டின் கிராமப்புறங்களில் சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாடு தொடர்பான தொண்டு நடவடிக்கைகளுக்கு எங்கள் குடும்பம் ரூ.60,000 கோடி வழங்கும்’’ என தெரிவித்துள்ளார்.

உலக அளவில் மார்க் ஜூக்கர்பெர்க், வாரன் பபெட் போன்ற உலக அளவில் பெரும் தொழிலதிபர்கள் தங்கள் சொத்தின் குறிப்பிட்ட அளவை மக்கள் பணி, சேவை திட்டங்களுக்காக செலவிடுகின்றனர். அந்த வரிசையில் தற்போது கெளதம் அதானியும் இணைந்துள்ளார். நன்கொடையாக வழங்கும் ரூ.60 ஆயிரம் கோடி, அதானியின் மொத்த சொத்து மதிப்பில் 8 சதவீதம் ஆகும். இந்திய கார்ப்பரேட் வரலாற்றில் வழங்கப்படும் மிகப்பெரும் நன்கொடைகளில் இதுவும் ஒன்றாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here