அடையாறு மட்டுமல்ல, கூவமும் கொற்றலையும்கூட பொங்கிப் பாய்ந்தன

0
1337

(டிசம்பர் 17,2015இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)

டிசம்பர் ஒன்றாம் தேதி நள்ளிரவிலிருந்து கரைபுரண்டு ஓடிய கூவம், டிசம்பர் இரண்டாம் தேதி காலை ஒன்பது மணியளவில் சற்றே தணிந்தது. அப்போது நண்பர் ஒருவர் எடுத்த காட்சிகள் இவை.

சென்னைப் பெருநகரம். சுமார் ஒரு கோடி மக்களின் வாழ்விடம்; மூன்று நதிகளின் உறைவிடம். 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி. காலை ஆறு மணிக்குத் தொடங்கிய மழை நிற்கவே இல்லை; டிசம்பர் இரண்டாம் தேதி புதன் கிழமை அதிகாலை இரண்டு மணி. இன்னும் மழை பெய்து கொண்டுதானிருக்கிறது. மழையில் மாட்டிக்கொண்ட ஜனங்கள், இருக்கிற காசை செலவழித்து வீட்டுக்குப்போக தயாராக இருக்கிறார்கள். ஆட்டோக்காரர் முருகேசனுக்கு ஒரே கொண்டாட்டம். தி.நகரைச் சுற்றிச் சுற்றி வந்தே அவர் சில ஆயிரங்களைச் சம்பாதித்து விட்டார். அதிகாலை இரண்டு மணிக்கு மனைவி கங்காவிடமிருந்து போன் வருகிறது. “கூவம் கரைபுரண்டு ஓடுகிறது; உடுத்த துணியோடு வெளியே வந்துவிட்டோம்; ஸ்கைவாக் அம்பா மால் பக்கத்தில் குழந்தைகளோடும் மற்ற ஜனங்களோடும் இருக்கிறோம்” என்று செய்தி. அடித்துப் பிடித்துச் செல்கிறார் முருகேசன்.

அந்த அதிகாலையில் கூவம் நதியோரம் அமைந்தகரையில் மட்டும் 2,500 குடும்பங்கள் வீடுகளை, உடைமைகளை இழந்த நிலையில் பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். கூவம் சிந்தாதிரிப்பேட்டையை அடையும் முன்பு அண்ணா சாலைக்குப் பின்னால் பொங்கி வழிகிறது; அண்ணா சாலை மக்கா மஸ்ஜிதுக்குள்ளும் வெள்ளம் புகுந்து வருகிறது; நான்கு அடுக்குக் கட்டடம் என்பதால் முதல் தளம் முதல் நான்காம் தளம் வரை பள்ளிவாசலுக்குள் மக்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார், இமாம் ஷம்சுத்தீன் காஸிமி. சில மக்கள் பள்ளிவாசலில் இடமில்லாமல், அண்ணா சாலை தாராப்பூர் டவர்ஸ் முன்பு சாலையில் தற்காலிகமாக வாழ்ந்தார்கள்.

டிசம்பர் 2ஆம் தேதி காலை. கனமழையால் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் தண்ணீர், கிருஷ்ணாபுரம் அணை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் வட சென்னையில் பக்கிங்ஹாம் கால்வாயில் வெள்ளம் பொங்குகிறது. பூண்டி, சோழவரம், செங்குன்றம் உபரி நீரும் சென்னைக்கு வடக்கே பொங்கிப் பாயும் இன்னொரு நதியான கொசஸ்தலையாற்றில் இணைகிறது. கொசஸ்தலையாறு எண்ணூரில் முகத்துவாரத்தை அடையும் முன்பு விச்சூர், சடையங்குப்பம், ஆண்டார் குப்பம், நாப்பாளையம், கவுண்டர் பாளையம், இடையன் சாவடி, மணலி புதுநகர், சத்தியமூர்த்தி நகர், ஜோதி நகர், கார்கில் நகரையெல்லாம் தனித்தீவாக்கிவிட்டுப் போகிறது. படகைத் தவிர எதிலும் மக்கள் பயணிக்க முடியாதபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது; ஒரு லட்சம் மக்கள் மழை அகதிகளாகிறார்கள்.

சற்று பின்னோக்கிச் செல்வோம். டிசம்பர் ஒன்றாம் தேதி மாலை ஆறு மணி. சென்னை விமான நிலையத்துக்குள் அடையாறு நதி புகுந்து வருகிறது. இரவு ஒன்பது மணி முதல் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. வரலாற்றில் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை வரை (டிசம்பர் 6) விமான நிலையம் மூடப்படுகிறது; விமான நிறுவனங்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் உண்டாகிறது. டிசம்பர் இரண்டாம் தேதி காலை 11 மணிக்கெல்லாம் சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலம் அருகே அடையாறு கரைபுரள்கிறது. பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. 1901ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒரே நாளில் இவ்வளவு பெரிய மழையை யாரும் பார்த்ததில்லை. 114 வருடங்களுக்குப் பின்னர் பெய்த மாமழையால் சென்னை மாநகரில் வேலைக்குச் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை; கடைக்குச் சென்று வீடு திரும்பியவர்கள் சிலர் பாதியில் நின்ற மின்சார ரயிலில் ஒரு நாளைக் கழித்தார்கள்;

டிசம்பர் இரண்டாம் தேதி தாம்பரத்தில் 49 சென்டி மீட்டர் மழை; செம்பரம்பாக்கத்தில் 47 சென்டி மீட்டர் மழை. அன்று சென்னையில் பெரிய மழை பொழியவில்லை; மக்கள் கொஞ்சம் ஆசுவாசப்பட்டார்கள். மாட்டிக்கொண்ட இடத்திலிருந்து டிசம்பர் மூன்றாம் தேதி பெரும்பாலும் வீட்டுக்குப் போய்விடலாம் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருந்தது; அதுதான் பெரிய தவறு. டிசம்பர் இரண்டாம் தேதி தாம்பரத்தில் பெய்த மாமழையால் நந்திவரம், ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், ஆதனூர் ஏரிகளில் உடைப்பு உண்டானது. அடையாறு மீண்டும் பொங்கியது. மணப்பாக்கம் டி.எல்.எஃப் ஐ.டி சிட்டியின் அடித்தளத்திலுள்ள மூன்றடுக்கு கார், டூவீலர் பார்க்கிங் மூழ்கியது.
டிசம்பர் மூன்றாம் தேதி மாம்பலத்துக்குள் புகுந்த அடையாறு நதி பற்றிய பதிவை இப்போது டாட் காமில் படியுங்கள். மூன்று நதிகளும் பக்கிங்ஹாம் கால்வாயும் பொங்கிய உண்மை வெள்ளத்தில் பொய்கள் கரைந்து காணாமல் போய்விடும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்