கூவத்தைச் சுத்தம் செய்யும் மாநிலக் கல்லூரி!

1
141

அரசுக் கல்லூரிகள் மாணவர் போராட்டங்களுக்கு மட்டுமே ஊடகங்களால் வெளிச்சம்போட்டுக் காட்டப்படுகின்றன; அவர்களது சாதனைகளை ஏனோ ஊடகங்கள் வெளிக்கொணர தவறுகின்றன. ஆம், சென்னை ஐஐடியின் தொழில்நுட்ப வளர்ச்சிக்குச் சவால் விடுத்துள்ளது மாநிலக் கல்லூரி. பாசி மூலம் (ALGAE) நீரைச் சுத்திகரிப்பு செய்யும் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு அதில் பல கட்டங்களைக் கடந்து வெற்றியும் கண்டுள்ளது. இந்த ஆராய்ச்சி மாநிலக் கல்லூரி பேராசிரியர் சன்னியாசி ஏழுமலை தலைமையின் கீழ் நடைபெற்று வருகிறது .

இது குறித்து பேராசிரியர் ஏழுமலை கூறியது:

தண்ணீர் சுத்திகரிப்பு என்பது தண்ணீரைப் பாதுகாப்பதைவிட இன்றியமையாதது

மாசுபட்ட நீரைச் சுத்திகரிப்பது என்பது தண்ணீரைப் பாதுகாப்பதைவிட முதன்மையான செயல். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எராளாமான ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகளும், தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் உள்ளன. இங்கு வெளிவரும் மாசுகலந்த நீர் விளைநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்துவது என்பது தொடர்கதையான பிரச்சனை. ஆனால் அவ்வாறு வெளிவரும் மாசு கலந்த நீரை மறுசுழற்சி செய்து இரண்டாம் தர நீர் தேவைகளுக்குப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் விளைநிலங்களையும் காப்பாற்ற முடியும்.

ஐ ஐ டியின் – ஆய்வு:

தண்ணீர் சுத்திகரிப்புக்கு பல தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக சென்னை ஐஐடியில் வெள்ளி அயனிகளைக் (SILVER IONS) கொண்டு நீரைச் சுத்திகரிப்பு செய்யும் தொழில்நுட்பத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் . ஆனால் இம்முறையிலான தொழில்நுட்பம் என்பது சிறிய அளவிலான சுத்திகரிப்பு முறைக்கு ஏற்றது . மிகப்பெரிய அளவில், அதாவது ஒரு மாநிலத்தில் உள்ள மாசுகலந்த நீரைச் சுத்திகரிப்பு செய்யும்போது இம்முறை பயன்படாமல் போய்விடும் வாய்ப்புகள் அதிகம். மேலும் இம்முறையிலான ஆய்வு அதிக செலவைக் கொண்டது. அது மட்டுமல்லாமல் சில வேதிப் பொருட்களால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை உபயோகிக்கும்போது நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு .

ஏன் பாசி?

எங்கள் ஆராய்ச்சிக்கு நாங்கள் எடுத்துக்கொண்ட முதன்மையான பொருள் பாசி.சாக்கடை நீரோட்டத்தைக் கூர்ந்து கவனித்தால் பாசி படர்ந்துள்ள இடம் மட்டும் தெளிந்து காணப்படும். காரணம் பாசி இயற்கையிலேயே கார்பன் அயனிகளை ஈர்க்கும் தன்மை கொண்டது. மேலும் பாசியால் சுற்றுச் சுழலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது குறைந்த செலவிலேயே நீரைச் சுத்திகரிக்க முடியும். எங்கள் ஆராய்ச்சிக்கு போட்ரியோகாகஸ் பருணி (BOTRYOCOCUS BRAUNII) என்ற பாசியைத்தான் உபயோகிக்கிறோம்; இந்தப் பாசியில் ஹைட்ரோ கார்பன் அதிகளவு உள்ளது மேலும் இதன் செல் சுவர் தடித்துக் காணப்படுவதால் அதிக அளவு கார்பனை ஈர்க்கும். எளிமையாக கூறவேண்டும் என்றால் பாசியைப் பயன்படுத்துவது ஆயுர்வேதிக் முறையைப் போன்றது.

கூவத்திற்கு 45 லட்சம்:

உலக வங்கி கூவம் நதியைத் தூய்மைப்படுத்துவதற்கென ரூ.400 கோடியை ஒதுக்கியுள்ளது. எங்கள் ஆராய்ச்சியைக் கொண்டு கூவம் நதியைத் தூய்மைப்படுத்துகிறோம் என்று அரசாங்கத்திடம் விண்ணப்பித்தபோது அவர்கள் எங்களுக்கு அனுமதி அளித்து, இந்தத் திட்டத்திற்காக ரூ.45 லட்சத்தை அளித்துள்ளனர். இதன் முதல்கட்டமாக கூவம் நதியின் குறிப்பிட்ட பகுதியைத் தேர்வு செய்து அப்பகுதியைத் தூய்மைப்படுத்திக் காட்டுமாறு கூறியுள்ளனர். இதன் அடுத்த கட்டமாக கூவத்தின் அனைத்து பகுதியையும் தூய்மை செய்ய வேண்டும். இத்திட்டத்தை முழுமையாக முடிக்க குறைந்தது மூன்று ஆண்டுகள் தேவைப்படும். மேலும் எங்கள் மாணவர்கள் திருப்பூர் ஆடைத் தொழிற்சாலையில் சாயக் கழிவைச் சுத்திகரிக்கும் திட்டத்திலும் பங்கு பெற்றுள்ளனர் என்று பெருமையுடன் கூறுகிறார் ஏழுமலை. இனியாவது அரசு கல்லூரிகள் மீதான மேம்போக்கான பார்வைகள் மெல்ல மறையும் என எதிர்பாக்கலாம்.

1 கருத்து

ஒரு பதிலை விடவும்