கூவத்தூரில் ஒரு சிலருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து முதல்வரானவர் பழனிசாமி; அந்த தவறுக்கு நானும் காரணமாகிவிட்டேன் – செந்தில் பாலாஜி

0
339

கூவத்தூரில் ஒரு சிலருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து முதல்வரானவர் பழனிசாமி. எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிய பாவத்தை நானும் செய்துவிட்டேன் என, செந்தில் பாலாஜி எம்எல்ஏ தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையை கடுமையாக உயர்த்திய பாஜக, அதிமுக அரசுகளை கண்டித்தும், விலைக்குறைப்பை வலியுறுத்தியும், கரூர் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ தலைமையில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (பிப். 22) நடைபெற்றது.

முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக கரூர் பேருந்து நிலைய ரவுண்டானவில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை மோட்டார் சைக்கிள், 2 கேஸ் சிலிண்டர்கள் ஏற்றிய மாட்டு வண்டியை மாவட்ட பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி ஓட்டி வந்தார். மாநில விவசாய அணி செயலாளர் ம.சின்னசாமி உடனிருந்தார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் வி.செந்தில் பாலாஜி பேசியதாவது:

“மண் வெட்டி எடுத்து பழனிசாமி முதல்வராகவில்லை. கூவத்தூரில் ஒரு சிலருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து முதல்வரானார். அன்று நானும் அந்த பாவத்தை செய்துவிட்டேன். அந்த தவறுக்கு நானும் காரணமாகிவிட்டேன். அந்த பாவத்தை கழுவவே நல்ல இடத்தில் சேர்ந்துள்ளேன்.

முதல்வராக பழனிசாமியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. பழனிசாமியின் பதவியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. எடப்பாடி தொகுதி மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்.

இன்றைக்கு பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.88. பெட்ரோல் விலை ரூ.32 தான். மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள வரி ரூ.55. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில், திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வரான பின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்”.

இவ்வாறு அவர் பேசினார்.

குளித்தலை எம்எல்ஏ ராமர், மாநில விவசாய அணி செயலாளர் ம.சின்னசாமி, மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், செயலாளர் கே.மணி உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here