கூரைகளைப் பிய்த்தெறிந்த வர்தா புயல்: பழவேற்காடு நேரடி ரிப்போர்ட்

0
565
பழவேற்காட்டிலுள்ள இந்த வீடுகளின் கூரைகளை அள்ளிச் சென்றது வர்தா புயல்

கடந்த 12ஆம் தேதி வீசிய வர்தா புயலின் தாக்குதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைப் புரட்டிப் போட்டதுண்ணுதான் சொல்லணும்; லட்சக்கணக்கான மரங்களையும் மின் கம்பங்களையும் சாய்த்ததோடு மட்டுமல்லாமல் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது.

வர்தா புயல் கரையைக் கடந்த பழவேற்காடு பகுதியிலுள்ள மக்களின் நிலைமையை அறிந்துவர நேரடியாக போயிருந்தேன். காலை 9.30 மணிக்கு செங்குன்றம் பஸ் ஸ்டாண்டுல இருந்து பழவேற்காடு போறதுக்கு பஸ் தேடிக்கிட்டு இருந்தேன்; அரை மணி நேரமாகியும் பஸ் வராததால அங்கிருந்த நேரக்காப்பாளர்கிட்ட ‘’பழவேற்காடு போவதற்கு பஸ் எப்ப வருமுன்னு கேட்டேன். “புயல் மழை காரணமா பழவேற்காட்டுக்கு இங்கேருந்து நேரடி சர்வீஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது; பொன்னேரி போயிட்டு அங்கிருந்து பஸ் இருக்குதான்னு பாருங்கள்’’ன்னு சொல்லிட்டார்; சரின்னு பொன்னேரி பஸ் ஏறிட்டேன். பஸ் பாடியநல்லூர், காரனோடை வழியா போச்சுது. பாடியநல்லுர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்திலுள்ள மரங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்து பள்ளிக் கட்டடங்கள் மீது விழுந்து கிடந்ததை பஸ்ஸிலிருந்தே பார்க்க முடிந்தது; காரனோடையிலிருந்து சுங்கச்சாவடி வரை ரோட்டோட ரெண்டு பக்கமும் பெரிய பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்து கிடந்தது; சோழவரம் பகுதியில் நெற்பயிர்கள் சாய்ந்து வயல் தண்ணீரில் முங்கிக் கிடந்தது. பஸ் தச்சூர் கூட் ரோட்டுக்கு வந்தபோது தச்சூர் பகுதி பஜார் கடைகளில் பல கடைகளின் மேல் கூரைகள் அந்தரத்தில் தொங்கிக்கிட்டிருந்துச்சு; அங்கிருந்த ஒயின்ஷாப்பின் (TASMAC) போர்டு ரோட்டுல வளஞ்சி போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்துச்சு.

ஆண்டார் குப்பம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கருல பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் வயலில் தண்ணீரில் மூழ்கி கிடந்துச்சு; இதப் பத்தி என்னோட பக்கத்து சீட்டுல இருந்த மாதவரத்தைச் சேர்ந்த பெரியவர் வேலாயுதத்திடம் கேட்டபோது ’’ஆண்டார் குப்பம் பகுதியில் சுமார் ஆயிரத்தி இருநூறு ஏக்கர் பரப்பளவுல நெல் பயிரிடப்பட்டிருக்கிறது; இன்னும் இருபது நாட்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிரெல்லாம் வர்தா புயலால சாய்ஞ்சு போச்சு”ன்னு அவர் சொன்னார். ’’இதை அறுவடை செய்ய முடியாதான்னு” அவர்கிட்ட கேட்டேன். இதுதான் நெல் பயிரில் பால் வைக்கக்கூடிய நேரம். இந்த நேரத்துல புயல் வந்ததால இனி நெல்லில் பால் பிடிக்காது; அறுவடை செய்யும்போது அதில் நெல் இருக்காது. வெறும் பதர்தான் இருக்கும்ன்னு அவர் சொன்னார். மேலும் டெல்டா பகுதிகளும் தென்மாவட்டப் பகுதிகளும் பருவமழை பொய்த்ததால நெல் விவசாயம் பண்ணமுடியால் போன இந்த நேரத்துல காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்துல இருந்த கொஞ்ச நெல்லையும் வர்தா புயல் நசுக்கிட்டுதுன்னு அவர் ரொம்ப ஆதங்கத்தோடு சொன்னார். பஸ் பொன்னேரி தேரடி வீதியில நின்னுச்சு. அங்கே ரோட்டுக்கு வலதுபுறத்தில் ஷெட்டில் கோவில் தேர் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சுமார் 60 அடி உயரமுள்ள அந்தத் தேர் ஷெட்டு மூன்று பக்கமும் இரும்புத் தகடுகளாலும் ஒரு பக்கம் தகரத்திலான ஷட்டராலும் மூடி இருந்துச்சு. ஷட்டர் முழுவதும் சேதமடைந்து அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த தேருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. ஒரு மணி நேர பயணத்துக்குப்பின் பொன்னேரியில் இறங்கியிருந்தேன்.

அங்கிருந்த நேரக்காப்பளரிடம் ’’பழவேற்காட்டுக்கு பஸ் இருக்கிறதான்னு’’ கேட்டேன். ’’மூணு நாளா பஸ் சர்வீஸ் கெடையாது. கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க சார். பஸ் சர்வீஸ் ஆரம்பிக்கப் போகிறோம்’’ன்னு சொன்னார். அடுத்த அரை மணி நேரத்தில் முதல் பஸ் புறப்பட்டது; பயங்கர கூட்டம். நான் அதுல ஏறல. அடுத்ததா பத்து நிமிஷத்துக்கு ஒரு பஸ் கிளம்புச்சு. ஓடியே போய் முன்னாடி சீட்ல உக்காந்துகிட்டேன். மெதூர் வழியா பஸ் போயிக்கிட்டு இருந்துச்சு. பொன்னேரியில இருந்து பழவேற்காடு வரையில ரோட்டோரமா ஒரு மரம்கூட இல்லை; பெரிய பெரிய புளிய மரங்களும் வேப்ப மரங்களும் வேரோடு சாய்ந்து கிடந்ததைப் பார்க்க முடிந்தது. பாரதி நகரில் மட்டும் பத்து பதினைந்து புளிய மரங்கள் நிற்பதைப் பார்க்க முடிந்தது. பொன்னேரி முதல் பழவேற்காடு வரையிலான ரோட்டின் இருபுறமும் மின் கம்பங்களும் முறிஞ்சு கிடந்தது; EB ஊழியர்கள் மின் கம்பங்களை நிறுவுற வேலையில துரிதமா செயல்பட்டுகிட்டிருந்தாங்க; புது மின் கம்பங்களை லாரியில கொண்டுவந்து இறக்குறதுலயும் அவைகளை நடுவுறதுலயும் பரபரப்பாக இருந்தார்கள் EB ஊழியர்கள். முக்கால் மணி நேரப் பயணத்துக்குப் பிறகு பழவேற்காட்டில் இறங்கினேன்.

பழவேற்காடு பஜாரைப் பார்த்தபோது அது ஒரு கலவர பூமி போல தெரிஞ்சது; கடைகளின் கூரைகள் சூறாவளியால் சூறையாடப்பட்டிருந்தது. பஸ் நிலையத்திலிருந்த உயர் கோபுர மின் விளக்குத்தூணில் மின் விளக்குகள் சரிந்திருந்தன; அங்கிருந்த போலீஸ் பூத்தின் மேல்கூரை காணாமல் போயிருந்தது. பஜாரிலிருந்த மரக்கிளைகள் ஒடிந்து மின்சார ஒயர்கள் மீது படர்ந்து கிடந்தது; ஓட்டல்களும் கடைகளும் திறக்கப்படவில்லை. பஜாரில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. அங்கிருந்த ஒரு டீக் கடையில் டீ குடித்தபடியே கடைக்காரரிடம் பேச்சு கொடுத்தேன். ”அண்ணே… வணக்கம். நான் ‘’இப்போது.காம்’’மிலிருந்து வர்றேன். உங்கள் பகுதியில வர்தா புயலோட பாதிப்பு பத்தி நேர்ல பாத்து செய்தி சேகரிக்கிறதுக்காக வந்திருக்கேன்னு’’ சொன்னேன்; அவ்வுளவுதான் அந்த டீக் கடை சகோதரர் என்னை மேலும் கீழுமாக ஒரு மாதிரியா பாக்க ஆரம்பிச்சிட்டார். ‘’என்னண்ணே அப்படிப் பாக்குறீங்க” அப்படின்னு கேட்டேன்.

‘’இல்ல; புயல் வந்து மூன்று நாள் ஆச்சி; இதுவரைக்கும் எந்த மீடியாவும் எந்தப் பத்திரிக்கையும் இந்தப் பக்கம் வரல; நீங்க வந்திருக்கிறது ஆச்சிரியமா இருக்குன்னார். நான் அந்த ஊருக்குப் புதுசு; எங்க எப்படி போறதுன்னு தெரியாம பஜாரைச் சுட்டிக்காட்டி ரொம்ப பாதிப்பான்னு கேட்டேன்; அதுக்கு அவர் ‘’இது என்னங்க பாதிப்பு? நீங்க ஊருக்குள்ள போய்ப் பாருங்க; எவ்வளவு பாதிப்புன்னு தெரியும்.’’ சொல்லிட்டு ‘’டேய் பிரசாந்த்…. சார் மீடியாவுல இருந்து வர்றாரு. நீ அவரைக் கூட்டிட்டு போய் ஊருக்குள்ள பாதிக்கப்பட்ட இடத்தையெல்லாம் காட்டுன்னு ஒரு பய்யனை என்கூட அனுப்பிவைத்தார். பிரசாந்துடன் பைக்கில் ஏறிக்கொண்டேன். முதலில் ஆண்டிக் குப்பம்; நடுவூர் மாதா குப்பம்; கோட்டைக்குப்பம், அம்பேத்கர் நகர், ரமீலாபாத், MGR நகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கோட்டைக்குப்பத்தில் உள்ள கரையோர மக்களைச் சந்தித்தேன்.

ஆண்டிக்குப்பத்தில் விக்டர் என்பவருக்குச் சொந்தமான இரண்டு படகுகள் தண்ணீரிலிருந்து 500 மீட்டருக்கு அப்பாலுள்ள கருவேலமரத்தில் தூக்கி வீசப்பட்டிருந்தது. கல்வி என்பவரது படகை புயல் காற்று தூக்கி மின் கம்பத்துல அடிச்சதுல அவரது படகு மூணு துண்டுகளா ஒடிஞ்சு கிடந்தது. ரகீம் என்பவருக்குச் சொந்தமான ஏழு படகுகளும் சேதமானது. அதில் ஒரு படகு முப்பது அடி உயரமுள்ள ஒரு வீட்டுக்கு மேல தொங்கிகிட்டு இருந்துச்சு. இதேபோல இந்தப் பகுதியில மட்டும் சுமார் 500 படகுகள் சேதமாயிருக்கிறது. 500 படகுல 150 படகுதான் ரிப்பேர் செய்ய முடியும், மற்ற சேதமான படகுகள் எதற்குமே உதவாது என்று சொல்லிவிட்டார்கள். படகு மட்டுமல்ல மீன்பிடி வலைகளும் மிக அதிக அளவுல சேதம் ஆயிருக்கு. இங்க இருக்குற மக்கள் தங்களது வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டு நிர்க்கதியாக நிற்கிறார்கள். வர்தா புயலின் கோரத் தாண்டவத்தை நேரில் பார்த்தவர்கள் அந்த அதிர்ச்சியிலிருந்து முழுமையாக மீளவில்லை. திருவள்ளூர் மாவட்டத்தின் பழவேற்காடு பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளுக்கு மிகவும் திண்டாடிக் கொண்டிருந்தார்கள். தண்ணீரை நம்பியே வழும் இந்தப் பகுதி மக்கள் குடிதண்ணீர் இல்லாமல் தவித்தார்கள்.

வர்தா புயல் பழவேற்காட்டிற்கும்-ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே கரையை கடந்தது; இந்தப் பகுதி மக்களுக்கு இதைப் பற்றிய முன்னறிவிப்போ பாதுகாப்பான முன் ஏற்பாடுகளோ செய்து கொடுத்தார்களா என்று இங்குள்ள மக்களிடம் கேட்டேன்.

ஜான்சி ராணி:

இங்கு நாங்கள் பத்தாயிரம் குடும்பங்களுக்கு மேல் இருக்கிறோம்; எங்களைப் பாதுகாப்பான இடத்துக்குக் கூட்டிட்டு போறதுக்காக ஒரே ஒரு பஸ் மட்டும் வந்துச்சு; அந்த ஒரு பஸ்ல 300 பேர் போனாங்க; அவங்களை மெதூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தங்கவைத்தார்கள். கரண்டு இல்லாத ரூம்ல அவங்கள தங்கவச்சி சாப்பாடு கொடுக்காம, குடிக்க தண்ணி கொடுக்காம, படுக்குறதுக்கு பாய் கொடுக்காம, ஒரு மாத்துத் துணிகூட கொடுக்காம மறுநாள் காலைல இங்க கொண்டுவந்து எறக்கி விட்டுட்டுப் போயிட்டாங்க. இன்னைக்குக் காலைல ஒரு டப்பா (டப்பாவைக் காட்டுகிறார்; 200 கிராம் கொள்ள்ளவு கொண்ட பிளாஸ்டிக் டப்பா அது) ரவை உப்புமா ஒரு குடும்பத்துக்குன்னு கொடுத்துட்டு போறாங்க. இந்த உப்புமாவை எத்தனை பேர் சாப்பிட முடியும்? நீங்களே சொல்லுங்க.

சகுந்தலா:

பேரிடர் மீட்புக் குழுவுலேருந்து இருபது பேர் எங்களைக் காப்பாத்துவதற்காக வந்தார்கள்; எனக்கு அது வேடிக்கையாக இருந்தது. ஏன்னா சென்னையில பெருவெள்ளம் வந்தபோது எங்க மக்கள் ஓடியே போய் சென்னை மக்களைக் காப்பாத்துனாங்க; இருவத்தினாலு மணி நேரத்துல இருவது மணிநேரம் தண்ணியில நீச்சலடிக்கிற எங்க மக்களை காப்பாத்த நீச்சல் தெரியாத ஆட்களை அனுப்பியிருக்காங்க; அவங்களை மண்டபத்துல தங்க வச்சு நாங்க பத்திரமா அனுப்பி வச்சிருக்கோம்.

டேவிட்ராஜ்:

மெட்ராஸ் சிட்டியில கார் மேல ஒரு மரம் விழுந்துச்சுன்னா அத படம் பிடிச்சி பத்திரிகையில முக்கியச் செய்தியா போடுறாங்க; ஒருத்தரோட பைக்கு மேல மரம் விழுந்துச்சுன்னா அதையும் படம் பிடிச்சு போடுறாங்க; டி.வி செய்தியில இத மாத்தி மாத்திக் காட்டுறாங்க; அதே பத்திரிகை காரர்களுக்கு எங்களோட 500க்கும் மேல்பட்ட படகுகள் சிதைந்து சின்னா பின்னமானதைப் படம்பிடிக்க மனசு வராதது ஏன்? நாங்க பாதிக்கப் பட்டிருக்கிறத படம்பிடிக்க பத்திரிகைகாரர்களும் டி.விகாரர்களும் வராதது ஏன் என்று ஆதங்கத்தோட கேட்டார்.

நேற்று நம்ம முதலமைச்சர் இந்தப் பகுதிக்கு வந்தாரே உங்ககிட்ட பேசலையான்னு நான் கேட்டேன்.

அதற்கு நாணயம் என்பவர் சொன்ன பதில்:

’’பாலத்திற்கு அந்தப் பக்கம் உள்ள மீனவர்களைத்தான் முதல்வர் வந்து பாத்துட்டுப் போனார். நலத் திட்ட உதவிகளையும் அந்தப் பக்கம் இருக்குற மக்களுக்கு மட்டுமே வழங்கிவிட்டுப் போய்விட்டார்; நாங்கதான் அதாவது இந்தக் கோட்டைக்குப்பத்து பஞ்சாயத்துல இருக்குற மீனவர்கள்தான் ஆதி தமிழக மீனவர்கள்; பாலத்துக்கு அந்தப் பக்கத்துல இருக்குறவங்கள்ல பாதிப்பேர் ஆந்திராவுல இருந்து வந்தவர்கள். ஸ்ரீஹரிகோட்டா ராக்கட் தளத்தை விரிவாக்கம் செஞ்சபோது அங்கிருந்த ஆந்திரா மீனவர்கள் பழவேற்காடு பகுதியில குடியமர்த்தப்பட்டார்கள். அவர்களில் பலர் பாலத்திற்கு அந்தப் பக்கமா இருக்குறாங்க; அவர்களுக்கு ரோடு வசதி நல்லா இருக்குறதால வருகிற ஆபிசருங்க எல்லாரும் நேர அவங்களை வந்து பாத்துட்டுப் போயிடுறாங்க. எங்க குப்பத்துக்கு ரோடு வசதி சரியில்லாததால எங்களை யாருமே மதிக்கிறதில்லை. எங்க ஊருக்குள்ள யாரும் வர்றதில்ல.
எங்களோட குப்பத்திற்கு முதல்வரும் சரி. அரசு அதிகாரிகளும் சரி. யாருமே இதுவரை வரவில்லை. எங்களது குறைகளைக் கேக்க வந்த முதல் பத்திரிகை நீங்கள்தான். நாங்க படுற கஷ்டத்தை வெளி உலகத்துக்குச் சொல்லுங்க.’’

வசந்த்:

போன மாசம்தான் ரெண்டர லட்ச ரூபாய்க்கு இந்தப் படகை வாங்குனேன். மீன் பிடிக்கிறத தவிர வேற ஒரு தொழிலும் எனக்குத் தெரியாது. பத்திரமா இருக்கறதுக்காக இந்த மரத்தில கட்டி வச்சேன். அடிச்ச புயல்ல மரம் ஒடிஞ்சு போட்டுல பட்டு போட்டு ஒடிஞ்சு போச்சு. எங்கிட்ட வேற எந்த விதமான சேமிப்பும் கிடையாது. வேலைக்குப் போனா சாப்பாடு அப்படிங்கற நெலமைல நாங்க இருக்கோம். போட்டும் ஒடஞ்சு போச்சு. என்ன செய்யுறதுன்னே தெரியல. எனக்கு 3 குழந்தைகள் இருக்காங்க. அவங்களுக்கு பால் வாங்ககூட என் கையில் இப்பப் பணமில்லை.

இவர்களைச் சந்தித்துவிட்டு ‘’அம்மா நகர் என்கிற திடீர் நகர்’’க்குப் போனோம். சுற்றிலும் நீர் நிறைந்த இந்தப் பகுதி ஒரு குட்டித் தீவு. 38 வீடுகள் இருக்கிறது. இந்த ஊரும் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிதான். இங்குள்ள மக்களின் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறது.

இந்தப் பகுதியிலுள்ள ஃபாத்திமா என்பவர் சொன்னது:

’’எங்க பகுதியில 38 வீடு இருக்கு. இது சுனாமி மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட குடியிருப்புகள். இங்க இருக்குறவுங்க எல்லோருமே வாடகைக்கு இருப்பவர்கள்தான். சொந்த வீட்டுக்காரர்கள் யாரும் இங்கே இல்லை. அதனால் எங்களுக்கு எந்தப் பாதிப்பு ஏற்பட்டாலும் யாரும் வந்து கேக்க மாட்டர்கள். ஏதாவது ஆபத்து வந்தாகூட சுத்தி தண்ணி இருக்குறதால எங்களால தப்பிச்சிகூட ஓட முடியாது; அரசாங்கம் அறிவிக்கிற எந்தவிதமான சலுகையும் எங்களுக்கு கிடைக்காது. எங்களையும் மதிச்சி எங்க ஊருக்கு வந்திருக்குற ஒரே ஊடகம் நீங்க மட்டும்தான். நீங்கதான் எங்களது நிலமையை வெளி உலகத்துக்குக் கொண்டுவரணும்.

ஷெப்பர்டு:

மீன் பிடித்தல் மட்டும்தான் எங்களுக்குத் தெரிந்த தொழில்; இங்கே இருப்பவர்கள் வாடகைப் படகில் மீன் பிடிப்பவர்கள். படகு சேதமடைந்தால் மீன் பிடிப்பவர்கள்தான் பொறுப்பு; மாசத்துல பாதி நாள் மீன் சரிவர கிடைக்காது. எப்படியிருந்தாலும் படகு வாடகை நாங்கள் கொடுத்துதான் ஆகணும். இதிலேயும் இயற்கைச் சீற்றம் அடிக்கடி வர்றதனால எங்களால பொழப்பு நடத்த முடியல. எங்க பய்யன் நல்லா படிச்சிருக்கான். கவர்மெண்ட் வேலைக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கான். எங்களோட ஜாதி சான்றிதழ்ல்ல MBCன்னு இருக்குறதால அவனுக்குக் கவர்மெண்ட் வேலை கிடைக்குறதுல ரொம்ப சிரமமா இருக்கு.

அவரிடம் பேசி முடித்துவிட்டு நேரத்தைப் பார்த்தேன். மணி 4;45. நேரமாகி விட்டதால் அங்குள்ள மக்களிடம் விடைபெற்றுக் கொண்டு திரும்பினேன்; பிரசாந்த் பத்திரமாக பஜாரில் கொண்டுவந்து விட்டார்; பிரசாந்துக்கும் டீக் கடை சகோதரருக்கும் நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து பஸ் ஏறினேன்.

ரெண்டாவது தடவையா மீண்டும் பழவேற்காடு பகுதிக்குப் போயிருந்தேன். இந்த முறை பாலத்திற்கு அந்தப் பக்கமாக இருக்கும் கூனாங்குப்பம், லைட்ஹவுஸ் குப்பம் பகுதிக்குப் போயிருந்தேன். கூனாங்குப்பம் பகுதியில புயல் சேதாரம் ரொம்ப அதிகமா பாக்க முடிஞ்சது; 600 மீட்டர் தூரத்துக்குப் படகுகள் தூக்கி எறியப்பட்டுக் கிடந்தது. கூனாங்குப்பம் கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மதில் மீது படகுகள் மோதிக் கிடந்தது. அதாவது ஏரிக்கும் பள்ளிக்குமிடையே சுமார் 600 மீட்டர் தூரம் இருக்கும். ஏரியில் ஓரமாக நிறுத்தி வச்சிருந்த படகு எல்லாம் புயலின் வேகத்தில் தூக்கி வீசப்பட்டு பள்ளிக்கூட மதிலில் மோதி சின்னாபின்னாமாகி கிடந்தது. சில படகுகள் சுக்குநூறாக நொறுங்கிக் கிடந்தது. மீன்பிடி வலைகள் அறுபட்டு கோவிலுக்குப் பின்புறம் மலைபோல் குவிந்து கிடந்தது.
பழவேற்காடு கூனாங்குப்பத்திலிருந்துதான் தமிழக கடற்கரை தொடங்குகிறது. கூனாங்குப்பம் முதல் குமரி மாவட்டம் நீரோடி வரை 1076 கிலோமீட்டர் வரையுள்ளது தமிழக கடற்கரைப் பகுதி.
அங்கிருக்கும் அங்காளம்மன் கோவில் முன்னாடி திரண்டிருந்த மக்களிடம் பேசினேன். வர்தா புயலின் கோரத்தாண்டவத்தை பற்றி அவர்களிடம் கேட்டேன்.

கோவில் பக்கத்துல பெட்டிக்கடை வச்சிருக்குற ஊர் பெரியவர் ரங்கநாதன் சொன்னது:

‘’காத்தடிச்சிகினு அல்லாமே பூடுச்சுப்பா; பொயலு வருதுன்னு சொல்லி ஊர் மக்கள அல்லாத்தயும் ஏத்திகினு சத்திரத்தாண்ட நைட்ல அடச்சு வச்சிகினானுங்க; இங்க மழத் தண்னி அல்லாம் வந்து சாமான் சட்டியெல்லாம் பூடுச்சு. அல்லா சனங்களும், இந்தாண்டயே இருந்துருந்தா சாமான் சட்டியாது மீந்துருக்கும். கட்டிக்க ஒரு கந்த கூட இல்லப்பா; அல்லாமே பூடுச்சு, சத்திரத்தாண்ட இட்டுனு போயிட்டு குடிக்க தண்ணிகூட தரலப்பா. சாப்பாடு இல்லாம, கரண்டு இல்லாம ராப்பொழுதே ரணமா பூடுச்சுப்பா. மறுநாளு காத்தால, தோ தவுலோண்டு உப்புமா கொண்டு குடுத்தானுங்க. கருமம் வாயில வைக்க முடியல. ஒரே உப்பு; அப்பாலைக்கு பத்து மணி இருக்கும். ஒரு பஸ்ஸுல பாதி சனங்களை ஏத்திகினு பாலத்தாண்ட எறக்கிவிட்டுட்டு போயிட்டானுங்க. இங்க வந்து பாத்தா என்னோட கட இருந்த எடத்தயே காணோம். அல்லாத்தையும் தண்ணி இஸ்துகினு போயிடிச்சி (அழுகிறார்). அஞ்சு நாளாச்சி. கவருமெண்டுல இருந்து ஆருமே வந்து எட்டிப் பாக்கல. வர்றவங்கல்லாம் இதோ சாப்பாடு வருது, பிரட்டு வருது, தோ வருது தோ வருதுன்னு சொல்றாங்கள காட்டியும் இதுவரைக்கும் ஒன்னும் வரல’’ என்றார்.

கூனாங்குப்பம் ஊர் நிர்வாகி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கண்ணன் சொன்னது:

”புயல் வந்து இன்னைக்கு அஞ்சு நாள் ஆச்சுது. இதுவரைக்கும் எங்களுக்கு எந்த ஒரு நிவாரணமும் கிடைக்கல இந்த கூனாங்குப்பத்துல இருக்குற மொத்த மீனவர்களும் பாதிக்கப்பட்டிருக்காங்க; 300 படகுகளுக்கு மேல சேதம் அடஞ்சிருக்கு, இங்குள்ள மணல் திட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அறுபது படகுகள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டிருக்கு; மீனவ மக்கள் நாங்கள் எங்களது வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு நிர்க்கதியாய் நிற்கிறோம். அரசாங்கம்தான் எங்களுக்கு ஒரு நல்ல வழியைக் காட்ட வேண்டும். நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவனாக இருந்தாலும் செய் நன்றி மறவக்கூடாது என்பதற்காக சொல்றேன். ’’அம்மா’’ இருந்திருந்தா இன்னைக்கு எங்களுக்கு நடுத்தெருவுல நிக்கக்கூடிய இந்த நிலமை வந்திருக்காது. கட்சி வேறுபாடு பாக்காம எல்லாருக்கும் உதவி செய்வாங்க. எப்பவோ எங்களுக்கெல்லாம் நிவாரண உதவி வந்து சேந்திருக்கும். ‘’அம்மா’’வோட மறைவு எங்களுக்கெல்லாம் பெரிய இழப்பு. இங்க வர்ற அதிகாரிகள் யாரும் பாதிக்கப்பட்ட இடத்துக்கு வந்து பாக்குறதில்லை; பாலத்துக்கு மேலே நிண்ணுகிட்டு லைட் ஹவுசை வச்சு போட்டோ எடுத்துக்கிட்டு போயிடுறாங்க. புயல் வந்து இன்னைக்கு அஞ்சு நாள் ஆச்சுது.

மற்றொரு ஊர் நிர்வாகியான அஇஅதிமுகவைச் சேர்ந்த ஜேசுராஜ் சொன்னது:

முதலமைச்சர் வந்து பார்த்துவிட்டுப் போயிருக்கிறார். தேவையான உதவிகளைச் செய்கிறோம் என்று சொல்லியிருக்கிறார். சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வந்து நேற்று வந்தார். மீனவக் குப்பத்திற்கு அவர் வரவில்லை. விருந்தினர் மாளிகை வரை வந்துவிட்டு திரும்பிச் சென்றுவிட்டார். நிவாரணப் பணிகளை விரைவாக செய்வார்கள் என்று சொல்லிவிட்டு அவர் போய்விட்டார். மின்சாரம் துண்டிப்பால் குடிதண்ணீர் தட்டுப்பாடு பெருமளவில் இருக்கிறது. சென்னையில் மழை வெள்ளம் வந்தபோது பல உதவிகளைச் செய்த தொண்டு நிறுவனங்கள், பல வெளிமாநில, வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள் எங்கள் மீனவ மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும்போது கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. ’’அம்மா’’ இருந்திருந்தால் புயல் வந்த அரைமணி நேரத்தில் எங்கள் வானிலும் எங்கள் வாழ்க்கையிலும் பல ஹெலிகாப்டருகள் பறந்திருக்கும். அதிகாரிகள் துரிதமாக வேலை செய்து இரண்டு நாட்களில் எங்களுக்கு மின் இணைப்பு வந்திருக்கும். ’’அம்மா’’ இல்லாதது எங்களைப் போன்ற பாட்டாளி வர்க்கத்தினருக்கு பேரிழப்பு.’’

லைட் ஹவுஸ் குப்பம் பக்கத்திலிருக்கிற படகு வயலில் (வலைகளை உலர்த்துமிடம்) வலையைத் தைத்துக் கொண்டிருந்த பெரியவர் சொன்னது:
‘’யான மேல இருக்குறவன் நாய்க்குப் பயப்பட வேண்டாம்; குதிர மேல இருக்குறவன் பேய்க்குப் பயப்பட வேண்டாம். ஆனா எங்க சனங்க தரையில இருக்குறவங்க. எல்லாத்துக்கும் பயந்துதான் ஆகணும்.

லைட் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த அஞ்சலி என்பவர் சொன்னது: பழவேற்காட்டுப் பகுதியில வர்தா புயலால மக்கள் ரொம்ப பாதிப்படஞ்சிருக்காங்க. எங்களுக்கு போதுமான நிவாரணம் கிடைக்க அரசாங்கம் ஏற்பாடு செய்யணும்.

தமிழ்நாடு அரசு இந்தப் பேரிடரை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்கலாம் என்கிற மக்களின் எண்ணம் என்னையும் ஆட்கொண்டது.

இதையும் படியுங்கள்: வர்தாவுக்கு 22 வருஷங்களில் காணாத வேகம்

இதையும் படியுங்கள்: வர்தாவால் இழந்த பசுமையை மீட்க இன்னும் பத்தாண்டுகள் ஆகலாம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்