பெரும்பான்மை இல்லாமல் அதிமுக அரசு ஆட்சியில் நீடிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்கும் விரோதமானது என திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்தாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் திங்கட்கிழமை (இன்று) தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரினை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையுடன் துவக்கி வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு செய்தது.

இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் “பெரும்பான்மை இல்லாமல் இந்த அரசு ஆட்சியில் நீடிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்கும் விரோதமானது. அவையில் மாண்புமிகு முதலமைச்சருக்குப் பெரும்பான்மை இருக்கிறதா என்பதை உறுதிசெய்யும் அரசியல் சட்டப்பொறுப்பும், கடமையும் உள்ள மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இந்த “மைனாரிட்டி அரசு” பதவியில் நீடிப்பதற்குத் தாராளமாக வாய்ப்பு அளித்திருப்பதுடன், அந்த அரசின் கொள்கையை வெளியிடும் “ஆளுநர் உரையை” ஆற்ற, சம்மதம் தெரிவித்திருப்பது பாராளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்குவதாக அமைந்துள்ளது.

18 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு, மாண்புமிகு முதலமைச்சருக்கு இல்லாத நிலையிலும், இந்தியத் தேர்தல் ஆணையமே அதிமுகவிற்கு 111 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது என்று தெளிவான உத்தரவைப் பிறப்பித்துள்ள நிலையிலும், மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான ஆட்சி நீடிப்பதும், அதை மாண்புமிகு ஆளுநர் உள்ளிட்ட அரசியல் சட்ட அமைப்புகள் வேடிக்கை பார்ப்பதும் இந்திய வரலாற்றின் வினோதமான காட்சிகளாகும்.

அதிமுக ஆட்சியைப் பொறுத்தவரை, அரசியல் சட்டம் மவுனம் சாதிப்பது மக்கள் விரோத காரியமாகும். இந்த அரசின் கொள்கைகளை அறிவிக்கும் உரையினைப் படிக்க மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஏற்றுக்கொண்டு இங்கே வந்திருப்பது கண்டு, பாராளுமன்ற ஜனநாயகம் வெட்கித் தலைகுனிகிறது. மாநிலத்தின் முதல் குடிமகனான மாண்புமிகு ஆளுநரின் இந்த நடவடிக்கை அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த 13.10.2017 அன்று, மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள் ஆளுநர்களின் 48-ஆவது மாநாட்டில் உரையாற்றும் போது, “ஆளுநர்கள் எவ்வித சர்ச்சைகளிலும் உட்படாத அளவிற்கு அரசியல் சட்டத்தைப் பின்பற்றி நடக்க வேண்டும்”, என்று அறிவுரை வழங்கி இருக்கின்ற சூழ்நிலையிலும், மாநில சுயாட்சிக் குரல் ஓங்கி ஒலிக்கும் இந்த மண்ணில், பிரதான எதிர்க்கட்சி மற்றும் இதர கட்சிகளின் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பையும் மீறி, தொடர்ந்து மாநிலம் முழுவதும் சர்ச்சைக்குரிய ஆய்வுகளை மேற்கொண்டு வரும் மாண்புமிகு ஆளுநர் அவர்களின் நோக்கும் – போக்கும் மக்களாட்சித் தத்துவத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.

“மைனாரிட்டி” அதிமுக அரசு நீடிப்பதால், அனைத்துத் துறையிலும் தமிழகம் பின்தங்கி, மக்கள் நாள்தோறும் தாங்க முடியாத துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். மாநிலத்தில் தொழில் மற்றும் பொருளாதார முன்னேற்றம் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்து வருகிறது. எங்கு பார்த்தாலும் இலஞ்ச ஊழலும், முறைகேடுகளும் கொடிகட்டிக் கோலோச்சுகின்றன. இந்த அநியாய அவலங்களுக்கு எல்லாம் மைனாரிட்டி அதிமுக அரசு தான் முதல் பொறுப்பு.

அதை வெறும் சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு ஆளுநர் அவர்கள், இதற்கு இரண்டாவது பொறுப்பு என்றே திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது. ஆகவே, சகலமும் அலங்கோலமான இந்த நிலையில், ஆளுநர் உரையைப் புறக்கணித்து திராவிட முன்னேற்றக் கழகம் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்கிறது.” என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: மனச்சோர்வுக்கு ஆளாகி தற்கொலை எண்ணம் வருகிறதா உங்களுக்கு ? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்