அணுக் கழிவு மேலாண்மை திட்டம் இல்லாததால் கூடங்குளம் அணுஉலை செயல்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை

கூடங்குளம் அணுஉலை தொடர்பாக கடந்த 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுமார் 15 உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவில் கூடங்குளம் அணு உலை செயல்படுவதற்கு முன்பாக அதன் பாதுகாப்புதன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும், சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் முதன்மையாக இருந்த்தன.

அணு உலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப்பெறப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தது உச்ச நீதிமன்றம். இந்த உத்தரவுகளுக்கு ஏற்ப சுயசார்ப்பு கொண்ட நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து கூடங்குளம் அணுஉலையை ஆய்வு செய்து இருக்க வேண்டும் இந்திய அணுசக்தி துறை. இதனை மேற்கொள்ளாமல் தன்னுடைய நிபுணர்களேயே நியமித்து, ஆய்வு செய்து அதன் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. வழக்காடிய பூவுலகின் நணபர்கள் எதிர்ப்பை நிராகிரித்த உச்ச நீநிமன்றம் மேற்கூறிய அறிக்கையை ஏற்றுக்கொண்டது. அதற்கு பின்பாக செயல்படுவதாக கூறப்படும் கூடங்குளம் அணு உலையின் முதல் இரண்டு அலகுகள் சுமார் ஐந்து வருட காலகட்டத்தில் 40 த்திற்கும் மேற்பட்ட முறை பழுடைந்து நின்றுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும்கூட கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட சுமார் 250 வழக்குகள் மட்டுமே பின்வாங்கப்பட்டன. இன்றளவும் அந்த பகுதி மக்கள் மீது சுமார் 150 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன் காரணமாக தங்கள் வாழ்வுரிமையை இழந்து தவிக்கின்றனர் அந்த பகுதி மக்கள்.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் சென்ற வாரத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது இந்திய அணுசக்தி நிறுவனம். அந்த மனுவில் 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற கூறிய 15 உத்தரவுகளில் இரண்டு உத்தரவுகளை அமல்படுத்த மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசம் கேட்கப்பட்டிருந்தது.

கூடங்குளம் வழக்கின் விசாரணை நடந்த சமயத்தில் அணு உலையிலிருந்து வெளியேறும் அணுக் கழிவுகள் எப்படி மேலாண்மை செய்யப்படும் என்னும் கேள்வி ஏழுந்தது. அதற்கு இந்திய அணுசக்தி துறை, கூடங்குளம் அணுஉலையில் இருந்து வெளியேறும் அணுக் கழிவுகள் அணுஉலையிலேயே சுமார் 7 ஆண்டுகள் பாதுகாக்கப்படும் என்றும், பின்பு நிரந்திர சேமிப்பு கிடங்கிற்கு எடுத்து செல்லப்படும் என்று கூறியது. இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், அணுஉலையிலேயே அணுகழிவுகளை சேமித்து வைப்பது என்பது ஆபத்தானது என்று கூறியது. அதற்கு முக்கிய காரணம் புகுசிமாவில் அணுஉலையில் இருந்த அணுகழிவு சேமிப்பு கிடங்கும் விபத்து காரணமாக பாதிப்புக்குள்ளானது என்பதுதான்.

இதன் காரணமாக அணுகதிர் வீச்சு அதி பயங்கரமாக இருக்கிறது. இதுபோன்ற நிலை உருவாகமல் இருக்க அணுஉலையில் இருந்து தொலைவில் அணுகழிவு சேமிப்பு கிடங்குகள் (Away from Reactor) அமைக்கப்படும் என்று இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் கூறியிருந்தது. இதனை உச்ச நீதிமன்றமும் ஏற்று கொண்டு 2013ஆம் ஆண்டு தீர்ப்பில் 5 வருட காலத்திற்குள்ளாக கூடங்குளம் அணுகழிவுகளை சேமிக்க அணுஉலையில் இருந்து தொலைவாக சேமிப்பு கிடங்கமைக்க உத்தரவிட்டது. மேலும் அணுக்கழிவுகளை நிலத்தின் ஆழத்தில் நிரந்தரமாகப் புதைக்கும் (Deep Geological Repository) திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதி மன்றம் தெரிவித்திருந்தது.

ஆனால் தற்போதுதான் இந்திய அணுசக்தி நிறுவனம் வேறுஒரு இடத்தில் (Away from reactor AFR ) அணுக்கழிவுகளை பாதுகாக்கும் திட்டவரையரைகளை வகுத்துக் கொண்டுள்ளது. கடந்த வருடம் தான் இத்திட்டதிற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி மனு தாக்கல் செய்யதுள்ளது.

இதைவிட அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், கூடங்குளம் அணுஉலை இதுவரை இந்திய விஞ்ஞானிகள் அறியாத புதிய தொழில்நுட்பம் கொண்டவை, அந்த உலைகளில் இருந்து வெளிவரும் அணுக்கழிவுகள் முழுவதும் மாறுபட்டவை. அந்த அணு உலைகளில் இருந்து வெளிவரும் அணுக்கழிவுகளை மேலாண்மை செய்ய தங்களிடம் தற்போது போதிய தொழில்நுட்ப வல்லமை இல்லை என்றும், ஆய்வு நிலையிலேயே திட்டம் இருப்பதாகவும் உச்ச நீநிமன்றத்தில் கூறியுள்ளது அணுசக்தி நிறுவனம்.

மேலும் நிரந்திர அணுகழிவு சேமிப்பு கிடங்கு (DGR ) அமைக்க வேண்டிய தேவை தற்போதைக்கு இல்லை என்றும் கூறுகிறது இந்திய அணுசக்தி நிறுவனம். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் தான் கொடுமையானது. இந்தியாவில் உள்ள எல்லா வகை அணுக்கழிவுகளும் மறுசூழற்சி செய்யப்பட்டு அணுஉலையில் பயன்படுத்த இருக்கிறது. எனவே அணுக்கழிவு என்பது பாரத தேசத்தின் சொத்து என்று கூறி, இதற்காகத்தான் கல்பாக்கத்தில் ஈனுலைகள் அமைக்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளது.

உலகத்தில் எங்கேயும் இல்லாத ஈனுலைகளை அமைக்கும் தொழில்நுட்பமும் இந்தியாவில் ஆரம்ப நிலையில்தான் இருக்கின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். இந்தியாவில் உள்ள எல்லா அணுஉலைகளில் இருந்தும் வெளியேறும் அணுகழிவுகள் கல்பாக்கத்திற்குத்தான் கொண்டு வரப்படுகின்றன. அதற்கான மறுசுழற்சி மையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகள் அங்குள்ளன. மேலும் புதிய மறுசுழற்சி மையமும் சேமிப்பு கிடங்கு ஒன்றையும் கல்பாக்கத்தில் கட்டிவருகிறது இந்திய அணுசக்தி துறை. இப்படி தமிழகம் அணுகழிவுகளின் தேசமாக மாற்றப்பட்டு வருகிறது. அணுகழிவுகளை மேலாண்மை செய்ய திட்டம் இல்லாத போது அணுஉலைகளை செயல்பட எப்படி அனுமதிப்பது?. அதுவும் அதற்குரிய தொழில்நுட்பம் இல்லாதபோது.

எனவே கூடங்குளம் அணுஉலைகள் முதல் இரண்டு அலகுகளில் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் விரிவாக்க திட்டங்கள் உடனடியாக கைவிடப்பட வேண்டும் என்றும் கோருகிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் இது குறித்து கவனப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here