ஐரோப்பிய யூனியன் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.34,265 கோடி (4.3 பில்லியன் யூரோ)அபராதம் விதித்துள்ளது.

கூகுள் நிறுவனம் தனது ஆன்ட்ராய்டை பயன்படுத்தி இன்டெர்நெட் பயன்பாட்டில், தவறான வழியில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்தது என்ற குற்றச்சாட்டில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் பொருள்களை வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் கூகுள் மூலம் தேடும்போது, தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது என்பது முக்கியக் குற்றச்சாட்டாகும்.

பெல்ஜியம் தலைநகர் பிரெஸ்ஸல்ஸில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்த ஐரோப்பிய யூனியனின் வர்த்தகப் போட்டிகளுக்கான ஆணையர் மார்கரித் வெஸ்டேஜர் இதனை தெரிவித்தார்.

முன்னதாக, கூகுள் நிறுவனம் தனது இன்டெர்நெட் சேவையில் தனக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பது, பிற நிறுவனங்களை மறைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதான குற்றச்சாட்டில் கடந்த 2017-இல் ஏற்கெனவே ரூ.19 ஆயிரம் கோடிஅபாரதம் விதிக்கப்பட்டிருந்தது.

இப்போது, அது தொடர்பாக மீண்டும் தீவிரமாக விசாரணை நடத்தி கூடுதல் தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து கூகுள் சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிகிறது.

ஐரோப்பிய யூனியனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்திருக்கும் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை

ஐரோப்பிய யூனியனின் நடவடிக்கை இலவச-ஆன்ட்ராய்டு வியாபாரத்தின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கும். பயனர்கள் சராசரியாக 50 செயலிகளை தாங்களாகவே இன்ஸ்டால் செய்கின்றனர். மேலும், பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகளை பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் அன்-இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும்.

மொபைல் போன் தயாரிப்பாளர்கள் மற்றும் மொபைல் நெட்வொர்க் ஆப்பரேட்டர்கள் எங்களது செயலிகளை தங்களது சாதனங்களில் அனுமதிக்காத போது, ஆன்ட்ராய்டு தளத்தை இது பெரிதும் பாதிக்கும். இதுவரை எங்களின் வியாபார யுக்தியானது, மொபைல் போன் உற்பத்தியாளர்களிடம் எங்களது தொழில்நுட்பத்திற்கு கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தவோ அல்லது கடினமான விநியோக முறையை பின்பற்ற வேண்டிய சூழலை ஏற்படுத்தவில்லை.

ஆன்ட்ராய்டை பயன்படுத்த விலையை நிர்ணயிக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூகுள் எச்சரித்துள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்