குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 30.7 சதவீத வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்படுவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

சென்னை அயனாவரம் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்த 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நாகரிக சமூகத்தின் புற்றுநோயாகக் கருதப்படும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், ஆண்டுக்கு சராசரியாக 13.6 சதவீதம் என்ற விகிதத்தில் அதிகரித்து வருகிறது.பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: நாடு முழுவதும் 2016-இல் 1,06,958 வழக்குகள் பதிவாகியுள்ளன. குழந்தைகள் கடத்தல் வழக்குகள் 52.3 சதவீதமும், பாலியல் வன்கொடுமை வழக்குகள் 34.4 சதவீதமும் உள்ளன. இவற்றில் பாலியல் பலாத்கார வழக்குகள் மட்டும் 82 சதவீதம் கடந்த 2016-ஆம் ஆண்டு அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மேலும், இக் குற்றங்களில் ஈடுபடுவோரில் 30.7 சதவீதம் பேருக்கு மட்டுமே தண்டனை கிடைப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறுகிறது. உதாரணமாக, கடந்த 2016-இல் தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகளில், 6,991-இல் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர், 15,772 வழக்குகளில் எதிரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நெந்ச் 3.002
நெந்ச் 3.003முதலிடத்தில் உத்தரப்பிரதேசம்: குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் உத்தரபிரதேசம் முதலிடமும், மகாராஷ்டிரம் இரண்டாமிடமும், மத்தியப் பிரதேசம் மூன்றாமிடமும் பிடித்துள்ளன. இதில் தமிழகம் 15-ஆவது இடத்தில் உள்ளது. 

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 2.7 சதவீதம் தமிழகத்தில் நடைபெறுகிறது.

மாநிலத்தில் கடந்த 2016-இல் குழந்தைகளுக்கு எதிராக 2,856 வழக்குகள் பதிவாகியுள்ளன. மாநிலத்தில் நடைபெற்ற மொத்த குற்றங்களில் 14.1 சதவீதம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்.சென்னைக்கு 14-ஆவது இடம்: நாட்டில் உள்ள 19 பெருநகரங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் நகரங்களில் வரிசையில் சென்னைக்கு 14-ஆவது இடம். 

சென்னையில் கடந்த 2016-இல் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்ற கொடுமைகள் தொடர்பாக 230 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஆனால் 2015-இல் 194 வழக்குகளே பதியப்பட்டுள்ளனபெற்றோரின் அக்கறையின்மை: இக்குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு மாறி வரும் கலாசாரம், குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் அக்கறையின்மை, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியன பிரதான காரணங்கள். 

குழந்தைகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபடுகிறவர்களில் 60 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் உறவினர் அல்லது நண்பர்கள்.

பாதுகாப்பு இல்லாமலும், பெற்றோரின் போதிய அரவணைப்பு இல்லாமலும் வளரும் குழந்தைகள், பாலியல் கொடுமைக்கு எளிதில் இலக்காகிவிடுகின்றனர் என்பதை குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


பள்ளிகளில் குழந்தைகள் நலக்குழு தேவை:இது தொடர்பாக மாநில குழந்தைகள் நல ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் பேராசிரியை ரேவதி கூறியது:

உலகமயமாக்கலின் நுகர்வு கலாசாரம் பல்வேறு தாக்கங்களையும், மாற்றங்களையும் நம் சமூக கலாசாரத்தில் ஏற்படுத்திவிட்டது. தனிநபர் நலனுக்கு அதீத முக்கியத்துவமும், சமூகநலனுக்கு முக்கியத்துவம் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு நபர், தனது குழந்தையைத் தவிர்த்து பிற குழந்தைகளை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

மாறி வரும் கலாசாரம், வளரும் தகவல் தொழிநுட்ப வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஏற்ப பெற்றோரும், பள்ளி ஆசிரியர்களும் இன்னும் முழுமையான விழிப்புணர்வு பெறவில்லை. இதனால் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இத்தகைய குற்றங்களைத் தடுக்க, தமிழகத்தில் கடந்தாண்டு அளிக்கப்பட்ட குழந்தைகள் நல கொள்கை வரைவு அறிக்கையை அரசு செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். பள்ளிகள்தோறும் குழந்தைகள் நலக் குழு அமைக்கப்பட்டு முறையாக செயல்படுத்த வேண்டும். அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே இத்தகைய குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றார்.மிரட்டல்: குழந்தைகள் நல ஆர்வலரும், உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான எஸ்.கிறிஸ்துராஜா கூறியது:

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதத்தினர் 18 வயதுக்கு உட்பட்டவர்களே. ஆனால் வளர்ந்து வரும் சமூகத்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. குழந்தைகளை வன்மத்தோடு பார்த்தாலே குற்றம் என குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால் அச்சட்டம் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை. இவ்வழக்குகள் விசாரணையின்போது மிரட்டி வாபஸ் பெற வைக்கப்படுகின்றன. நீதிமன்றங்களில் இந்த வழக்குத் தொடர்பான விசாரணை முறையாக நடைபெறுவதில்லை. குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர் மிரட்டப்படுவதால், நீதிமன்றத்தில் தண்டனையும் கிடைப்பதில்லை.வளர்ந்த நாடுகளில் குறைவு: ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2 சதவீதம்தான். இந்நாடுகளில் பள்ளியின் அடிப்படைப் பாடத்தில் இருந்தே பாலினக் கல்வி குழந்தைகளுக்கு புகட்டப்படுவதும் இதற்குக் காரணம். 

நம் நாட்டிலும் குழந்தைகளுக்கு பாலினக் கல்வி அளித்தால், இப்படிப்பட்ட குற்றங்களை வெகுவாகக் குறைக்க முடியும். அதேபோல அரசு அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் குழந்தைகளை மையமாக வைத்து நிறைவேற்ற வேண்டும். குழந்தைகளை மதிக்கும் சமூகம்தான் வளர்ந்த சமூகமாக இருக்க முடியும் என்றார் அவர்.


courtesy:dinamani

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்